உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154



'புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்வதைவிட உயிர் விடுவது அறம் கூறும் ஆக்கம்' என்பர் வள்ளுவர். நேரே பார்க்கும்போது "இந்திரன்' என்றும் 'சந்திரன்" என்றும் பேசிவிட்டுச் சற்று மறைந்ததும் அவர்களை இழித்தும் பழித்தும் கூறுபவர் உளர். அதைவிட நேரே டேய்! நீ அயோக்கியன், கீழ்மகன்' என்று கூறிவிடலாம். நீ ஒரு கோழை; அது மட்டும் அன்று அறிவிலி, வீண் பெருமை: மற்றவர்களைக் குறைவாகப் பேசுவதால் நீ மிக உயர்ந்தவன் என்பது உன் கணிப்பு; உன் சொல் கசப்பு அதனால் நீ கயவன் ஆகிறாய்,

கவர்ச்சியாக உடை உடுத்தி அதை வைத்துத் தொழில் நடத்துவது பெண் மைக்கு இழுக்கு. மகளிர் அழகாக இருப்பது பிறரைக் கவர அன்று. பிறர் நேசிக்க, அழகு மகிழ்ச்சியை ஊட்டலாம். அஃது என்றும் இன்பம் தருவது; கவர்ச்சி விபச்சார நோக்கு உடையது. பிறரைக் கெடுக்க முயல்வது; அதனால் அது கசப்பானது; கயமையும் ஆகும்.

'நூறு பிழை செய்தாலும் மன்னிக்க' என்று கேட்டுக் கொண்டாள் சிசுபாலனின்தாய்; அதுவரை கண்ணன் பொறுத்தான். அதற்குமேல் சென்றபோதுதான் ஒறுத்தான். பிழைகள் நூறு செய்தாலும் சான்றோர் பொறுப்பர். ஒரு நன்மை செய்திருந்தால் அதைப் பாராட்டித் தீமைகளை மன்னிப்பர். கீழோர் எழுநூறு நன்மைகள் செய்து ஒரு சில தவறுகள் செய்துவிட்டால் அவற்றையே எடுத்துப் பேசுவர். இது கீழ்மையாகும்; கசப்பான செய்தி; எனவே கயமையாகும்,