438 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்
நரசிம்மன் எம்.ஏ.பி.டி. என்கிற இருபத்தேழு வயது இளைஞன் அவருடைய திருக்குமரன் முருகேசனுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்க நியமிக்கப்பட்டு இன்னும் அதிக நாட்கள் ஆகிவிடவில்லை. ஆனால் பொன்னம்பலம் அவர்களுடைய மனத்தில் அந்த டியூஷன் வாத்தியாரைப் பற்றிய கோபதாபங்கள் அதிகமாகிவிட்டன. கோபதாபங்கள் ஏற்படும்படியாக நரசிம்மன் நடந்து கொள்ளவில்லை என்றாலும், சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமலே பிறர் மனத்தில் அவர்களைப் பற்றி உருவாகி விடுகிற கோபதாபங்களும் உண்டு.பொன்னம்பலம் அவர்களைப் போல் பஞ்சை மனம் படைத்தவர்களுக்கும் இத்தகைய கோபதாபங்களுக்கும் நெருக்கம் அதிகம்.
நரசிம்மன்மேல் அவர் கோபித்துக் கொண்டதற்குத் தெளிவான காரணம் ஒன்றுமில்லையானாலும் தெளிவற்ற காரணங்கள் பல இருந்தன.
அந்த டியூஷன் வாத்தியார் போகிறபோது, வருகிறபோது தன்னிடம் நிறையச் சிரித்துப் பேசவேண்டுமென்று அவருக்கு ஆசையாயிருந்தது. நரசிம்மனுக்கு, அப்படி ஒரு முகராசி. இந்தப் பிள்ளை நம்மோடு கொஞ்சநேரம் சிரித்துப் பேசிவிட்டுப் போகமாட்டானா?” என்று மற்றவர்களை நினைத்து ஏங்க வைக்கும் ஏதோ ஒரு கவர்ச்சி அவனிடம் இருந்தது.
சந்தனக் குழம்புபோல் நிறம். எப்போதுமே மெளனமாகச் சிரித்துக் கொண்டிருப்பதைப் போன்ற முகம். அந்த முகத்தில் எப்போதாவது அபூர்வமாகத் திறந்து மெல்லப் பேசும் சிவந்த உதடுகள். கைவீசி நடந்து வருகிறபோது பரிசுத்தமே எதிரே வருவதுபோல் ஒரு தூய்மை, எந்த உபகாரத்துக்காகவும் எவரிடமும் கூசி நின்று தலையைத் தாழ்த்தாமல் நிமிர்ந்த நிலை, இவை எல்லாம் ஒன்று சேர்ந்த ஒர் அபூர்வ குணச் சித்திரம்தான் நரசிம்மன். யாரோ சிநேகிதர் சிபாரிசு செய்தார் என்பதற்காக இவனை டியூஷன் வாத்தியாராக எடுத்துக் கொண்டார் பொன்னம்பலம். யாருமே சிபாரிசு செய்ய வேண்டாத குணங்கள் பல இவனிடம் இருப்பது பின்னால் அவருக்கே தெரிய வந்தது.
“என்ன வாத்தியார் சார்? இங்கே வேலை செய்யிறது பிடிச்சிருக்கா.நம்ம பையன் எப்படியிருக்கான்?....உருப்படறத்துக்கு ஏதாவது வழி உண்டா?” என்று வாத்தியார் வந்த மூன்றாவது நாளோ, நான்காவது நாளோ,பொன்னம்பலம் அவரை விசாரித்தார்.
அவர் அப்படி விசாரித்தபோது இவ்வளவு கொச்சையான பேச்சை இதற்கு முன்னால் என்றுமே தான் கேட்டதில்லை என்று நாணி நின்றாற்போல இரண்டு கணங்கள் நின்றுவிட்டு, சிரித்துக் கொண்டே நடந்து மேலே போய்விட்டான் நரசிம்மன்,
இன்னொரு நாள் நரசிம்மன் டியூஷன் சொல்லிக் கொடுப்பதற்காக பங்களாவுக்குள் நுழைந்து வந்து கொண்டிருந்தபோது பொன்னம்பலம் முன் ஹாலில் அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருந்தார். நரசிம்மன் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் இன்றைக்காவது இந்த ஆளிடம் பத்து நிமிஷம் நேருக்கு நேர் கலகலப்பாய்ச்சிரித்துப்பேசிவிடவேண்டுமென்ற ஆவலோடு"இந்தா தவசிப்பிள்ளே!