பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74. செல்வாக்கு

ண் நிறைய ஆவலும், இதழ் நிறையக் குறுநகையும், உடல் நிறைய நளினமுமாக அந்தப் பெண் கதவோரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாதவன் தலையைக் குனிந்து கொண்டு தெருவில் நடந்தான். இப்படி எத்தனை கண்கள்? எத்தனை பெண்கள்? ‘சாளரத்தில் பூத்த தாமரை மலர்கள்’ என்ற கவியின் கற்பனை அவன் நினைவில் மெல்லப் படர்ந்து மறைந்தது. எதையோ நினைத்துக் கொண்டு அவன் பெருமூச்சு விட்டான்.

தெருத் திருப்பத்தில் இறங்கி வாசக சாலை இருக்கும் பக்கமாக அவன் கால்கள் நடந்தன. ஐயாயிரத்துக்குக் குறையாமல் மக்கள் தொகையும், பொய்யா வளமும் கொண்ட அந்த ஊரில் மாதவனுக்குப் பழக்கமானவர்கள் வாசக சாலையிலுள்ள புத்தகங்களும், மலையோரத்து ஒடைகளும், சோலைகளும், சாலைகளும், வயல்வெளிகளும் தவிர வேறில்லை.

மனிதர்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளாதவனுக்கு அனுதாபப்பட யார் கிடைப்பார்கள்? அது ஒரு இரண்டுங் கெட்டான் ஊர். நகரத்தோடும் சேர்க்க முடியாது; கிராமத்தோடும் சேர்க்க முடியாது. டாக்டர்கள், இரண்டொரு வக்கீல்கள், நிறையப் படித்துப் பட்டம் பெற்றவர்கள், எல்லோரும் இருந்து நகரத்தின் பெருமையை அதற்கு அளித்தார்கள். வறட்டுத் திமிரும், முரட்டுக் குணமும், எதையும் சிந்தித்து முடிவு செய்யாத அலட்சிய மனப்பான்மையும், அது ஒரு கிராமம்தான் என்பதையும் அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டே இருந்தன.

“சார்…! உங்களைத்தான்.” கீழே பார்த்துக் கொண்டே வாசக சாலைக்குள் படியேறி நுழைவதற்கிருந்த மாதவன், குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சிரித்த முகமும் கூப்பிய கைகளுமாக நீலகண்டன் நின்றார். மாதவன் பதிலுக்கு வணங்கி விட்டு அவரருகில் போய் நின்றான்.

“சார் நீங்கள் என்னிடம் சொல்லவே இல்லையே…?”

“எதைக் கேட்கிறீர்கள்?”

நீலகண்டன் சிரித்தார். மாதவன் முகத்தை ஓரிரு விநாடி உற்றுப் பார்த்தார். கிருஷ்ண விக்கிரகத்தின் முகம் போன்றிருந்த சலனமற்ற - அழகிய மாதவனின் முகத்தில் உணர்ச்சியின் உயிரோட்டமில்லாத சிரிப்பு ஒன்று தோன்றி ஒடுங்கியது. சிரிக்காமலிருக்கக் கூடாதே என்பதற்காகச் சிரித்த சிரிப்பு அது.

“கலா நிலையத்தில் உங்களை வேலையிலிருந்து நீக்கி விட்டார்களாமே?”