பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / கடுவாய் வளைவு 587

ஏரிக்கரையிலுள்ள பழத் தோட்டங்களின் நடுவிலோ, அல்லது ‘குலு’ பள்ளத்தாக்கிலோ இருக்கிறோமா?’ என்று எனக்குச் சந்தேகமாகப் போய்விட்டது!

எத்தனை எத்தனை விதமான மரங்கள்? எத்தனை மலர்கள்! எவ்வளவு நிறங்கள்! எத்தனை வகைப் பழ மரங்கள்! எவ்வளவு செடி கொடிகள்! எங்கும் ஒரே பசுமை! அங்கங்கே அற்புதமான கீத ஓசையோடு கலகலவெனப் பாயும் நீரூற்றுகள்; சுற்றிலும் மேகமென்கின்ற மெல்லிய வெள்ளைச் சல்லாத் துணியைப் போர்த்து விளங்கும் மலைச் சிகரங்கள். அழகு! அழகு! ஒரே இயற்கையின் எழில்!

“கரையாளரே! சாஸ்தாவைக் கும்பிடுவதற்கு முன்னால், முதலில் உம்மை ஒருதரம் கும்பிடலாம் போலத் தோன்றுகிறது ஐயா! நேற்றுவரை என்னால் கற்பனைகூடச் செய்திருக்க முடியாத இடத்துக்கு என்னைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டீரே!”

“இப்பொழுதே அதிகமாகப் புகழ்ந்து விடாதீர்கள் ஸார்! இன்னும் பிரமாதமான இடங்களை எல்லாம் இனிமேல்தான் பார்க்கப் போகிறோம். முக்கியமாக இதன் கிழக்கே தேயிலைத் தோட்டங்களுக்குப் பக்கத்தில், ‘கடுவாய் வளைவு’ என்று ஒரு இடமிருக்கிறது. அது இயற்கை யழகின் சிகரம் மட்டுமல்ல, பயங்கர நிகழ்ச்சிகளின் சிகரமும்கூட”

“ஆமாம். பயங்கரத்தின் சிகரமாக விளங்குவதற்கு அப்படி அங்கே என்னதான் ஆபத்திருக்கிறது?”

“பயந்துவிடாதீர்கள், ஸார்! அது மிக அடர்த்தியான மலைப்பகுதி. இந்தப் பக்கத்தில் இதற்கு மற்றொரு பெயர் ‘புலிகளின் கோட்டை’ என்பது. இங்கே வேட்டைக்கு வந்து போகிற வெள்ளைக்காரர்கள் வைத்த பேர் ஸார், அது!”

“ஐயையோ! வேண்டாம் கரையாளரே! நான் சினிமாவில் நிறையப் புலிகளைப் பார்த்திருக்கிறேனே...”

“முதலில் கோவிலுக்குப் போகலாம். அடுத்த திட்டத்தைப் பற்றிப் பின்பு யோசிப்போம். நீங்கள் இப்போதிருந்தே நடுங்க வேண்டாம்!”

ரியங்காவு ரயில்வே ஸ்டேஷன் ஊரைவிட மேட்டின் மேல் அமைந்திருந்ததனால், படி வழியாக இறங்கித் திருவனந்தபுரத்திற்கு மலைவழியாகச் செல்லும் சாலை மேல் நடந்தோம். பத்து, இருபது கெஜதூரம் சென்றதும் ஐந்தாறு டீக் கடைகளுக்கு நடுவே, செம்மண்பட்டை அடித்த வாயில் ஒன்று தென்பட்டது. பகலிலேயே கும்மென்று இருள் குழுமாறு மரஞ்செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. கூரை வேய்ந்து தாழ்வான மண் சுவர்களால் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கிராமாந்தரத்து டீக்கடைகளில் மலையாளத் தினப் பத்திரிகைகளைப் படித்துக்கொண்டு, சிலர் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். தமிழும் மலையாளமும் கலந்த கதம்ப பாஷையில் அவர்கள் பேச்சு அமைந்திருந்தது. சாரல் விழுந்தபடி குளிர் மூட்டமாக இருந்த அந்தப் பருவச் சூழ்நிலையில், உடம்புக்குச் சூடேற்றுவதற்காக எத்தனை டீ வேண்டுமானாலும் குடிக்கலாம்! டீக் கடைகளில் பத்திரிகையும் கையுமாகக் கூடி