பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்னுடைய அரசு ஊழியக் காலத்தில் நூற்றுக்கணக்கான, பலநிலை அலுவலர்களோடு, உதவியாளர்களோடு, பணியாளர்களோடு நான் வேலை செய்ய நேர்ந்தது.

அவர்கள் எல்லோரும் மொத்தத்தில் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்று சொல்லலாம்.

நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் தங்கள் சாதி, சமய அரசியல் கோட்பாடு வேற்றுமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் இயக்கம் நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

நிர்வாகிகளையும், பொதுமக்களையும் ஊக்குவித்தவர்கள் தமிழ்நாட்டின் இருபால் ஆசிரியர்களே! என் பதவிக் காலத்தில் அவர்கள் தங்கள் நலன்களைப் பற்றியே சிந்திக்காமல் தங்கள் நலன்களைப் பற்றிச் சிந்திக்கும் பொறுப்பை இயக்குநரிடம் விட்டு விட்டு, பொது நலத்தைப் பற்றியே சிந்தித்துச் செயல்பட்டார்கள். செயற்கரிய செய்து காட்டினார்கள். தன்னம்பிக்கையும், பிறருடைய நம்பிக்கையும் பெற்றவர்களாக விளங்கினார்கள். என்னுடைய வெற்றியின் ஒவ்வோர் அணுவும் அவ் வாசிரியர்களுக்கு உரியதாகும்.

'நினைவு அலைகள்', பத்தாண்டுப் பணி. என்னுடைய நூல்களில் மிகப் பெரியது; மூன்று பகுதிகளைக் கொண்டது. 2300 பக்கங்களைக் கொண்டது. நினைவுஅலைகள் மூன்று பாகங்களுக்கப்பால் பெரியவர்களுக்காக 30 நூல்களுக்குமேல் 3000 பக்கங்கள் அளவில் எழுதியுள்ளேன். அவை போக 13 சிறுவர்களுக்கான நூல்களை (வள்ளுவன் வரிசை) என்னும் தலைப்பில் எழுதியுள்ளேன்.

நினைவு அலைகளை இவ்வளவு விரிவாக எழுதி முடித்ததில் நான் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றியதாக மன நிறைவு கொள்கிறேன். என்னுடைய வாழ்நாள் ஊழியத்தின் தொடர்ச்சியாகவே இது அமைந்தது. எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

முதல் இரண்டு பகுதிகளைச் சுடச்சுட ஏற்றுக் கொண்ட தமிழ் மக்கள் இந்தப் பகுதியையும் விரைந்து ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இன்று திரும்பிப் பார்க்கிறேன். என்னால் நம்ப முடியவில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/15&oldid=480535" இலிருந்து மீள்விக்கப்பட்டது