பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்வழி
(ஔவையார்)

கடவுள் வாழ்த்து

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்;—கோலம் செய்
துங்கக் கரி முகத்துத் தூ மணியே!—நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

நூல்

புண்ணியம் ஆம்; பாவம் போம்; போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்; எண்ணுங்கால்,
ஈது ஒழிய வேறு இல்லை, எச் சமயத்தோர் சொல்லும்;
தீது ஒழிய, நன்மை செயல்!1

சாதி இரண்டு ஓழிய வேறு இல்லை. சாற்றுங்கால்:
நீதி வழுவா நெறி முறையின், மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்;
பட்டாங்கில் உள்ளபடி.2

இடும்பைக்கு இடும் பை இயல் உடம்பு இது அன்றே?
இடும் பொய்யை மெய் என்று இராதே; இடும். கடுக;
உண்டாயின், உண்டாகும், ஊழின் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும்வீடு.3

எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்யொண்ணாது,
புண்ணியம் வந்து எய்து போது அல்லால்; கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே;
ஆம் காலம் ஆகும், அவர்க்கு.4

வருந்தி அழைத்தாலும், வாராத வாரா;
பொருந்துவன, 'போமின்' என்றால், போகா; இருந்து ஏங்கி,
நெஞ்சம் புண்ணாக, நெடுந் தூரம் தாம் நினைந்து,
துஞ்சுவதே. மாந்தர் தொழில்.5