பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

மறை வழிப்பட்ட பழிமொழி, தெய்வம்
பறை அறைந்தாங்கு ஓடிப் பரக்கும்:—கழி முடைப்
புன் புலால் நாற்றம் புறம் பொதிந்து மூடினும்.
சென்று உதைக்கும் சேயார் மூகத்து.94

மெலியார் விழினும் ஒருவாற்றான் உய்ப;
வலியார் மற்று ஒன்றானும் உய்யார்; நிலை தப்பி,
நொய்ய சழக்கு என வீழாவாம்; வீழினும்,
உய்யுமால்: உய்யா, பிற.95

இசையாத போலினும் மேலையோர் செய்கை
வசை ஆகா, மற்றையோர்க்கு அல்லால்;—பசு வேட்டு,
தீ ஓம்பி, வான் வழக்கம் காண்பாரை ஒப்பவே,
ஊன் ஓம்பி ஊன் தின்பவர்?96

எவர் எவர் எத் திறத்தர், அத்திறத்தராய் நின்று,
அவர் அவர்க்கு ஆவன கூறி, எவர் எவர்க்கும்
உப்பாளாய் நிற்ப, மற்று எம் உடையார்—தம் உடையான்
எப்பாலும் நிற்பது என.97

மெய் உணர்ந்தார், பொய்ம் மேல் புலம் போக்கார்; மெய் உணர்ச்சி
கைவருதல் கண்ணாப் புலம் காப்பார்; மெய் உணர்ந்தார்
காப்பே நிலையா, பழி நாணம் நீள் கதவா,
சேப்பார் நிறைத் தாழ் செறித்து.98

கற்றுத் துறை போய காதலற்குக் கற்பினாள்
பெற்றுக் கொடுத்த தலைமகன்போல்,—முற்றத்
துறந்தார்க்கு மெய் உணர்வில் தோன்றுவதே இன்பம்;
இறந்த எலாம் துன்பம் அலாது இல்.99

கற்றாங்கு அறிந்து அடங்கி, தீது ஒரீஇ, நன்று ஆற்றி,
பெற்றது கொண்டு மனம் திருத்தி, பற்றுவதே
பற்றுவதே பற்றி, பணி அற நின்று ஒன்று உணர்ந்து,
நிற்பாரே—நீள் நெறிச் சென்றார்.100

ஐயம் திரிபு இன்று, அளந்து உத்தியின் தெளித்து.
மெய் உணர்ச்சிக் கண் விழிப்பத் தூங்குவார் தம் உளே
காண்பதே காட்சி: கனவு நனவு ஆகப்
பூண்பதே தீர்ந்த பொருள்.101