பக்கம்:நூறாசிரியம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

81


தூய்மையுற்றுப் பின்றை இடத்தானும் வினையானும் வேறுபடப்பட மனம் திரிதலும், மனந் திரியத் திரியப் பின்னையும் இயக்கத்தான் வேறுபடுதலும் உலக வியற்கை. இவ்விளங்கல் வேறுபாடு அறிவான் சமநிலைப்பட்டுப் பொருந்தத் தோன்றுதலும், அது கூடாவிடத்தே திரிந்து மாறுதலும் எவராலும் மாற்றவியலாத இயற்கைக் கூறுபாடுகளாம்.

நீர் என்பது பொது வெனினும், சிறப்புக் கருதுமிடத்து, அது ஊற்று நீர் என்றும், ஆற்றுநீர் என்றும், இன்னும் பலவாறும் இடத்தாலும், உப்பு நீரென்றும், வெப்பு நீரென்றும், இன்னும் பலவாறும் வினையானும், இன்னும் உள்வினை கருதுகையில் அதனதன் உட்கூறு பலவாயும் வேறுபட்டு விளங்குதல் காண்கின்றோமா அல்லமா? ஐம்பூதப் பொருளில் ஒன்றாய அந்நீரே இவ்வாறு பல்வேறு திறத்ததாக விளங்குகையில், ஐம் பூதங்களும் தத்தம்முள் அளவினும் திறத்தினும் பல்லாயிரங்கோடி வகையான கூறுபாடுகளில் ஒன்றியும் ஒன்றாமலும், இன்னும் அவ்வவற்றின் திறங்களுக்கேற்பக் கோள்களாலும் உடுக்களாலும் மனம் அறிவு வெளிகளினாலும் திரிக்கப்பெற்றும் ஆளப்பெற்றும் விளங்கித் தோன்றும் இவ்வுயிரினங்களும், அவற்றினும் தேறி. விளங்கிய இம் மாந்த வினமும் எத்துணை எத்துணை வகையால் வேறுபட்டன என்பதைப் பூத நூலும், வேதியல் நூலும், கோனுாலும், மனநூலும், அறிவு நூலும், உயிர் நூலும் விளங்கக் கற்றவர்கள் தெள்ளிதின் உணர்வர். உணரவே அவர் பொருட்டாக எழுந்ததிப்பாட்டு என்க.

இனி, மாந்தப் போலியர் உளரெனினும் அவர் மாவினும் புள்ளினும் மயங்கித் தோன்றுதல் எங்ஙனமெனின், கூறுதும்.

உயிர் விளக்கக் கூறுபட்டான் உலகின்கண் காணப் பெறும் இவ்வுயிர்கள் கூர்தலற ஒழுங்கின் ஒன்றினின்று ஒன்று தேறியும் திரிந்தும், பெருகியும் விளங்குதல் வெள்ளிடைமலை, அவ்வாறு தேறித் திரிதலுறுங் காலத்து முதற்கண் உடல் திரிதலும் அத் திரிபுநிலைக் கேற்ப உள்ளந் திரிதலும் உயிர் நூல் கூறும் உண்மையாகும். இனி, உள்ளத் திரிபுக் கேற்ப உடல் மேன் மேலும் திரிதலுறும். அதன் மேல் உள்ளமும் மேன் மேலும் விளங்கித் தோன்றும். இவ்வாறு உடலும் உள்ளமும் முன்னது தோன்றப் பின்னது விளங்கியும், பின்னது விளங்க முன்னது தோன்றியும் ஒத்த நடையிட்டு மீமிசைக் கூறுபாடுகள் எய்தும் என்க. விலங்கினின்றும் புள்ளினின்றும் திரிந்து தோன்றிய மாந்தன் மேற்கொண்டு உள்ள விளக்கத்திற் குரியயவனாகின்றான். அவ்வுள்ள விளக்கம் முற்றும் நடைபெறாவிடத்து மாந்தவுடலும் விலங்குள்ளமும் பெற்றோனாக விளங்குகின்றான். அவன் அவ்விலங்குள்ளத்தை முற்றும் விட்டு வெளியேறும் வரை, அவ் விலங்குக்கும் பறவைக்கும் ஒப்பவே நடந்து வினை மேவுகின்றான்.

பெண்டிர் யாவருமே ஆடவர் மருவுதற் கேற்றவராக விருப்பினும், அப் பெண்டிருள் ஒருத்தியையே தான் மருவுதற்கேற்றாளாகக் கொள்வது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/107&oldid=1181909" இலிருந்து மீள்விக்கப்பட்டது