பக்கம்:நூறாசிரியம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

119

நீவீர் அறிந்தது யாங்கன்? யாம் அறியவேண்டாதென்று கடவுள் கருதிச் செய்த ஒன்றை நீவிர் எமக்குப் புலப்படுத்த முயற்சி செய்வது ஏன்? என்பன போலும் வினாக்கள் எழுதலை உன்னுங்கால் கடவுள் என்னும் தன்மையை மக்கள் உணர்ந்த நிலை மனக்கலக்கமுற்ற நிலையே என முடிவு வரும்.

இனி, கடவுளின் மெய்க்கொள்கைதான் என்னையோ எனின், அது கலக்கமுறா மனத்தெழுந்த தெளிந்த இறைக்கூறுபாடே என்க. இறை எனும் கொள்கையோ மறைவெளிப்பாடு. (கடவுள்-உள்ளங் கடந்தது, இறையாவினும் இறுத்த தன்மை உடையது. இறுத்தல்-தங்குதல்) மறைந்த நிலை புலப்படுவது இறை-என்னை? அறியக் கண்டது அறியாமை, அறியாமை கண்டது அறிவு. அறிவின் பலநிலைப்படிகளின் மீமிசைக் கொள்கையே மெய்யறிவுக் கொள்கை. அதுவே இறைக்கொள்கை. இறைநிலையுள் அணுவும் அண்டமும் ஒன்றே இறைநிலையுள் அறிவும் அறியாமையும் ஒன்றே, விருப்பும் வெறுப்பும் ஒன்றே! புனலும் அனலும் ஒன்றே நிலனும் விசும்பும் ஒன்றே; புலம்பனும் உடலும் ஒன்றே ஒன்றினுள் ஒன்று ஒடுங்கும்; வெளிப்படும்; ஒன்றைவிட் டொன்று இயங்கும் அடங்கும் ஆகிய அனைத்து வினைப்பாடுகளும் இறைக் கூறுபாடே! இவற்றுள் இஃது இறைமை, இஃது இறைமையன்று என வேறுபிரித்தல் மாந்த அறிவுக்கு எட்டாதது. இவற்றின் தனித்தனி விளக்கமே அறிவியலும், சமயமும், நம்பு மதமும் நம்பாமதமும், பத்திமையும், பற்றின்மையும். இவற்றை விரிக்கில் மிகப்பெருகும். எனவே இறைமை என்னும் தன்மை எவராலும் மறுக்கப்படுவதொன்றன்று. எவராலும் மறுக்கப்படாததெதுவோ, எவராலும் ஒப்புக்கொள்ளப்படுவதெதுவோ அதுவே இறைத்தன்மை, அன்பு, தாய்மை, இன்பம் முதலிய விழை பாடுகளும், சினம், பேய்மை, துன்பம், முதலிய வெறுக்கைப்பாடுகளும் இறைத்தன்மைகளே. தீயின் குடும், நீரின் குளிர்ச்சியும், இடியின் கொடுமையும், மழையின் அருண்மையும் இறைத் தன்மைகளே! இவற்றுள் ஒளி வேண்டுவன சில இருள் வேண்டுவன சில:தீ வேண்டுவது சில நிலை, நீர் வேண்டுவது சில நிலை வேண்டப் பெறும் உயிர்களுக்குப் வேண்டப் பெறாத நிலைகள் உளவாகையால், அவை இறைமையல்லாது போய்விடுமோ ? அழுதரற்றும் துன்பம் தேவையற்றதெனின், கண்ணீரால் கண்கள் கழுவித் தூய்மை செய்யப் பெறுதல் இல்லாது போகுமே; அழுகையால் புலர்ந்து மலரும் சில உடலனுக்கள் தோன்றாதொழியுமே ; இடி மின்னல் இன்றாயின் உலகுக்குக் காந்தவெளி குறைந்து வெறுமையுறுமே, ஆகையின் ஒளியும் இருளும் இறையே. துன்பமும் இன்பமும் இறைத்தன்மைகளே. அவை ‘கன்மத்தாலோ’, ‘மாயையினாலோ' உண்டாக்கப்பெறும் என்பன வெல்லாம் இறைவியல் தெளிவற்ற கலக்கமுற்றார் கதைத்த உரைகளே. அக்கன்மமும் மாயையும் இறையினின்று வேறுபடுவன வென்னின், இறைமையின் தனித்தன்மைக்கே இழுக்கெனக் கொள்க. அக்கதைப்புரைகளின்றெழுந்த கடவுட் கூறுபாடுகள் இறைமையைப் பழிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/145&oldid=1220809" இலிருந்து மீள்விக்கப்பட்டது