பக்கம்:நூறாசிரியம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

260


முழங்குகின்ற கட்டளைகளைத் தெறிக்கின்ற வாயினனும் ஆகிய பக்தவச்சலன் என்னும் முதலமைச்சன் , தன் பதவியழுத்தத்தினின்றும் பெயராமல் இருந்த இருக்கையின் நலத்தினால், தன் நினைவில் தவறியும், தனக்கு மேலராகிய வட நாட்டினர்க்குப் பணியும், கோணலான வெள்ளிய அறிவினோடும், தான் இடுகின்ற கட்டளைக்குச் சற்றும் இடராத போக்கினை உடைய காவலர்கள்,துமுக்கியால் சுட்டுக்கிடத்திய செந்தமிழ் காக்கும் இளையோனாகிய, வளமையும் கூர்மையும் உடைய நாவினனாகிய இளங்கோ என்னும் மாணவன், மருத்துவமனையின் கண் துன்புற்று உயிர் துறந்தானாக; அதனால் அளாவியெழுந்த மாணவர்கள் தாங்கள் கற்பதற்காகக் கொண்டு சென்ற நூல் சுவடிகளை ஒரு புறத்தே வீசியெறிந்து விட்டுத் தங்களுடைய மலை போலும் தோள்களில் வீரத்தை ஏற்றிக் கொண்டு கனல்கின்ற விழியில் தீயினை ஏற்றிக் கொண்டு, கல்வி பயிலும் செவ்விய நாவில் சினத்தை உடையவராக உள்ளுயிர் அறவே கழன்று வெளியே கழியுமாறு ஒரு கருப்பப் பேற்றில் பல நூறு ஈசல்கள் புறப்பட்டு வெளியேறுதல் போல், கதிர்களைப் பிடுங்கியெறிகின்ற நெற்களம் போலும், எதிரே நிற்கின்ற மரங்களையெல்லாம் வீழ்த்தி, ஒச்சியவாறு, முகம் படுத்திய பருத்த கைகளை நீட்டிக் கொண்டு, காட்டை அழிக்கின்ற களிறுகள் போல், எரிமலையின் வாயினின்று சிதறியடிக்கின்ற உலைபோன்ற நெஞ்சுகளை உடையவராகி, (அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினின்றும்) வெளியேறிப் புதுவெள்ளத்தின் பொங்குகின்ற சினத்தவராகிய போக்குடையவராகிக் கொதிக்கின்ற நல்ல நெய்போல், பிறர் நடுக்கமுற, அக் காவலர் படைகளை எதிர்த்துப் போரிட்ட பொழுதில்!

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

அண்ணாமலை நகரத்துத் தமிழ்காக்கத் துஞ்சிய அரசேந்திரனொடு, குண்டடிபட்டு மருந்தகத்து உயிர்துறந்த இளங்கோவனைப் பாடியது.

“கொதிப்புறு நறுநெய்யாக, விதிர்ப்புறப் படைப்புலம் எதிர்ந்த ஞான்றே, எவர்கொல் அவர்க்கே முனிவாற்றும்மே' என இறுவாய்த் தொடையாக வைத்துப் பொருள் கொள்ளுக.

அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவன் அரசேந்திரன் காவலர்களின் குண்டடிபட்டு, அவ்விடத்திலேயே மாய்ந்தான்; அவன் நண்பனாகிய இளங்கோவனோ துமுக்கிச் சூடுபட்டு, மருத்துவமனையில் துன்புறக் கிடந்து இறந்து போனான். அவன் இறந்து போன செய்தியைக் கேள்வியுற்ற மாணவர்கள் கொதிப்புடன் வீறுகொண்டெழுந்து, காவலர் படையுடன் போரிட எதிர்ந்த காட்சியைக் கூறுவதாகும் இப்பாடல்.

காலமும் சூழலும் முன்னைய பாடல்களுள் காட்டப் பெற்றன.

எவர்கொல் அவர்க்கே முனிவு ஆற்றும்மே - எவர்தாம் அவர்க் கெழுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/286&oldid=1221145" இலிருந்து மீள்விக்கப்பட்டது