பக்கம்:நூறாசிரியம்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

351

தாம் யாவையென்று வினவுவாயாயின் கூறுவேன் என்று தொடங்கித் தன் கற்பனைப் பெண்டாட்டியின் பொற்புறு நலங்களைக் கூறுவதாக அமைந்தது இப்பாட்டு

நன்மகளுக்குரிய அறிவாற்றலும், நா நலமும் பொருளாட்சித் திறமும், தற்காப்பு வல்லமையும் எத்தகையனவாய் இருத்தல் வேண்டும் என்பது இப்பாடலில் விளக்கியுரைக்கப்பட்டுள்ளது.

பிறர் மனந் தூக்கி-திறங்கொல் எலுவ - மற்றையோர் மனநிலையை ஆராய்ந்து அவர்தமக்கு ஏற்ற உதவியைச் செய்யும் ஆற்றல் வாய்ந்த தோழனே!

வினைப்பாடு நோக்கிய ஆராய்ச்சியே தலையாயது ஆதலின் தூக்கி இயல்வன செய்யும் திறங்கொள் எலுவ என்றான். தூக்கி ஆராய்ந்து. இயல்வன பொருந்துவன. எலுவ தோழனே!

திகைப்பு அறக் கேண்மோ - மயக்கமறக் கேட்பாயாக

தோழனின் பொருட்டு மேற்கொள்ளத்தக்க செயல் யாது என்றறியாத நிலையில் இருந்தானை நோக்கித் திகைப்பு நீங்கக் கேண்மோ என்றான்.

எலுவ என்று விளித்தவன், அவன் போல்வாரையும் உள்ளடக்கிக் கேண்மோ எனப்பன்மையிற் கூறினான்.தன் பெற்றோர்.துண்டுதலாலேயே தோழன் மணவினை குறித்துப் பேசுகின்றான் என்னும் ஊகத்தால் அவரை உள்ளடக்கிக் கூறினான். எனினுமாம்.

மனைக்கு என் வேண்டுவ என்பையின் - மணமகளுக்கு வேண்டியன யாவை என வினவுவாயாயின்,

இக்காலத்து மணவினை முயற்சிகளிலெல்லாம் மனக் கொடையே பெரிதும் பேசப்படுதலின் இவ்வாறு கூறினான்.

மனை-மனைவி; ஈண்டு மணமகள் என்பையின் - என்பை ஆயின் எனற்பாலது இவ்வாறு நின்றது. யின் என்பது ஆயின் என்பதன் தலைக்குறையாகக் கொள்க!

மாண்டோர் தனைக் ..... குறிப்பறிவே - மாட்சிமை வாய்ந்த பெரியோர் தனக்குக் குறிப்பாக உணர்த்துதலை தான் அறிந்து கொள்ளும் குறிப்பு அறிவு ஆற்றல்.

மாட்சி வாய்ந்த பெரியோராவார் பெற்றோரும் மற்றும் சான்றோரும், தக்க விருந்தினருமாம்.

பொழுது சூழ்பு உணர்ந்து புலப்படுத்து உணர்வே - காலமும் சூழலும் அறிந்து தன் கருத்தை வெளிப்படுத்துகின்ற உணர்வு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/377&oldid=1209394" இலிருந்து மீள்விக்கப்பட்டது