பக்கம்:நூறாசிரியம்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

415

புறப்புலன்களால் கண்டு கேட்டு, உண்டு உயிர்த்து உற்று அறியப்படுவனவும் உணரப்படுவவையுமான அனைத்துப் பொருள்களையும் என்றவாறு,

இயக்கலே வாழ்க்கை - துய்ப்பின் பொருட்டு இயக்குதலே வாழ்க்கை எனப்படுவாம்.

வல்லமை இருபால் குறையும் காலை-வாழ்க்கைக்கான ஆற்றல் உயிரிடத்து உளத்தானும் அறிவானும் குன்றியவிடத்து உடலையும், உளத்தொடும் அறிவொடும்பட்ட அனைத்துப் பொருள்களையும் இயங்குதற்கான ஆற்றல் உயிரிடத்துக் குறைவுற்ற காலை.

எல்லாம் தூக்கிய இறைஅவன் இயக்கும் - உயிரின் பொருட்டு உடலையும் பிற எல்லாப் பொருள்களையும் தோற்றுவித்த இறையாகிய அவன் உயிர்களை இயக்குவான்.

இறையவன் என்றமையால் மெய்யியல் நிலைபற்றி இறை என்றும், உலகியல் நிலைபற்றி அவன் என்றும் சுட்டினார் என்பது கொள்ளப்படும். இறையவன் என்பது ஒரு சொல் நீர்மைத்து.

இல்லவன் என்பது கல்லார் கூற்று - இறைவனை இல்லாதவன் என்று மறுத்துக்கூறுவது மெய்ந்நூல்களைக் கற்றுணராதார் கூறும் கூற்றாம்.

இது இன்மைக் கொள்கையரான நம்பாமதத்தாரைக் குறித்துக் கூறியது.

இறைவன் இல்லையென்போர் ஐயறிவும் ஐயறிவை யொட்டிய பகுத்தறிவும் மட்டுமே கொண்டு முடிபுகட்டி யுரைத்தலின் அது கல்லார் கூற்று என்றார். கல்லாராவார் மெய்ந்நூல்களைக் கற்று அறிந்து உணராதோர். மெய்ந்நூலறிவானும் மெய்யுணர்வானும் இறைவன் அறியப்படும் என்பது.

இன்னவன் என்பது பேதையர் கூற்று - இறைவனை இத்தகையோன் என்று கூறுவது அறிவுத் தெளிவில்லாதார் கூறும் கூற்றாம்

இது உண்மைக் கொள்கையரான நம்பும் மதத்தாருள் ஒரு சாரரைக் குறித்துக் கூறியது. இறைவன் இருப்பை உடன்படினும் இன்னவன் என்று வண்ணித் துரைத்தலால் அவரைப் பேதையர் என்றார்.

இன்னவன் என்பதாவது இன்ன வடிவினன், இன்ன நிறத்தினன் என்றும், இன்னின்ன சில இயல்புகளை யுடையான் என்று வரையறுத்தும் கூறுதலாம். இன்னும் அவன் இன்ன இடத்தினன் என்றும் ஆணென்றும் பெண்ணென்றும், மனைவி மக்களும் வைப்பாட்டியுங் கொண்டு குடும்பங் குடித்தனத்தோடு வாழ்கிறான் என்றும் பிறவாறும் கூறப்படுவன வெல்லாம் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/441&oldid=1223963" இலிருந்து மீள்விக்கப்பட்டது