பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

151

அவளுக்கு, அவளே காவல். கசப்பான கொடுமையை, இனிப்பாகச் செய்த திருப்தியில் நின்ற அந்த மனிதப் பேர்வழிகளின் கண்ணில் பட்ட, தன் நிர்வாணத்தை மறைக்க முடியாது என்பதை உணர்ந்து, அவள் தன் கண்களை- நிர்வாணமாயிருந்த தனது கண்களைத்தான்–இமைகள் என்னும் ஆடைகளால் மறைத்தாள்.

சிறிது நேரத்தில், மானம் அவளைப் பங்கப்படுத்த, அவள் சோளப் பயிருக்குள் ஓடப் போனாள். சற்று பள்ளமாய்க் கிடந்த கமலைக் கிடங்கின் முடிவிடத்தில் பதுங்கப் போனாள். தென்னை மரத்தருகே மறையப் போனாள். ஓடப் போனவளை, வீரபத்திரன் ஓடிப் பிடித்தார். பதுங்கப் போனவளை, பேச்சிமுத்து பாய்ந்து பிடித்தார். மறையப் போனவளை, பிள்ளையார் மடக்கிப் பிடித்தார். கலாவதி பேச்சற்று, நினைப்பற்று, பிரமைக்குள் நின்றாள்.

“நெருப்பிற்குப் பயந்து, ஆகாயத்தை வட்டமடித்த பறவைகளே! நீங்களாவது ஊருக்குச் சொல்லலாமே .. ஓ... நிர்வாணப் பறவைகளான உங்களுக்கு அவள் நிர்வாணம் ஒரு பொருட்டாகத் தெரியலயோ...? தோட்டத்தின் நிர்வாணத்தை மறைக்கும் பயிர் பச்சைகளே! பட்டென்று கீழே விழுங்கள். அப்படி விழுந்தால், தொலைவில் யாராவது போனால், அவர் கண்ணில் இந்தக் காட்சிபட்டு, ஊருக்கு சேதியாய் போனாலும் போகலாம்!


தாவர சங்கமம், கலாவதியைக் கைவிட்டது. காதல் தூதுக்கு கிளியுண்டு; நிர்வாணத்திற்கு ஏது?

கலாவதி, கை சோர்ந்து, மெய்சேர்ந்து, சிந்தையிழந்து, செயலிழந்து, உடம்பில் ஏற்பட்ட நிர்வாணத் தால், உள்ளத்தாலும் நிர்வாணப்பட்டவள் போல், வீரபத்திரன் மேல் சாய்ந்தாள். அவர் ‘சீ’ என்று உதறியபோது, அவள் தலை, பேச்சிமுத்துவின் தோளிலும், கைகள்,