உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

35

போல், அவளைச் சுட்டெரிக்கப் பார்த்தான். பின்னர் தனது 'தப்பை' மறைக்கும் வகையில், சிறிது விலகி உட்கார்ந்தான். பேச்சை நிறுத்தினான்.

அவன் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்த தமிழரசி, அவன் பேச்சற்றதும், அற்றவனைப் பார்த்து, அவன் கண்கள் குவிந்த இடத்தில், பொன்மணியைக் கண்டாள். லேசாக நாணப்பட்டாள். பிறகு அதை மறைக்கும் வகையிலோ அல்லது இப்போதுதான் கூடி வரும் காதலை, நாணத்தில் கரைக்க விரும்பாததாலோ, பொன்மணியைத் தைரியமாகப் பார்த்தாள். நன்றியோடு பார்த்தாள். இவள்தானே, 'எங்க தாமோதரன் அண்ணனுக்கு தமிழரசி அண்ணியை வாங்குறதுக்காக ஒங்களுக்கு' எங்கக்காவை’ கொடுக்கோம்’ என்று தன் தமையன் ராஜதுரையிடம் சொன்னவள்! இவள் அப்படிச் சொல்லவில்லையானல், ஒருவேளை நானே இங்கு வந்திருக்க மாட்டேன். அதனல், ஒருவேளை இவரை... வேண்டாம். நினைக்கவே பயமாய் இருக்கு.

ஒட்டியும் ஒட்டாமலும் விலகி நின்ற பொன்மணியின் கையைப் பிடித்திழுத்து, அவளே உட்காரும்படி பலவந்தப் படுத்தியபடியே "வாம்மா கல்யாணப் பொண்ணு, ஏன் இப்படி வெட்கப்படுறே?” என்றாள். பொன்மணியோ, தமிழரசியிடம் இருந்து திமிறி விடுபட்டு, அருகே நின்ற தென்னைமரம் பக்கமாகப் போய் நின்று, முந்தானையை கண்களுக்கு மேல் கொண்டுபோனாள். இடுப்பில் இருந்த விஷப்பாட்டிலே தடவியபடியே, அவர்களுக்குப் புறமுதுகு காட்டி நின்ற பொன்மணி, தனது மன நிலையை எப்படி விளக்குவது என்று புரியாமல் தவித்தாள். அது என்னமோ, அண்ணனிடம் நேருக்கு நேராய் பேசியறியாதவள்; பேசித் தீர்த்து விடவேண்டும் என்று வந்தவளால், பேச முடியவில்லை. எப்படி விஷயத்தை விவகாரமாக்குவது என்று தெரியாமல், தவித்தபடி நின்றாள்.