பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்றாம் பத்து

103


நெய்தல் நிலவளம்:

தெளிவுரை: பூங்கொத்துக்கள் செறிந்த ஞாழல் மரங்களை யுடைய கரையினிடத்தே பொருந்திய பெரிதான நீர்த்துறை யிடத்தே, நீலமணியாற் செய்யப்பெற்ற கலத்தைப்போல விளங்கும் கரிய விதழ்களையுடைய நெய்தற்பூக்களைக் கொண்ட, அதன் பசுமையான இலைகள் விளங்கும், குளிர்ந்த கழியிடத்தே துழாவிப் பெற்ற மீன்களை யுண்டுவிட்டுப், புன்னை மரத்தினது வெண்ணிறப் பூக்கள் நிறைந்த கிளை களிலே சென்று குருகினம் தங்கியிருக்கும். அத்தகைய புன்னைமரச் சோலைகளையுடையதும், தங்குதல் பொருந்திய கடற்கரைச்சோலை யென்னப் படுவதுமான, மணல்மேடுகள் விளங்கும் அடைகரையிடத்தே, தாழப் படர்ந்திருக்கும் அடும்பின் கொடிகளை மோதிய கடற்சங்குகள் ஒலிசெய்யும். அவ்வொலியைக் கேட்டு அங்கு வந்தடையும் மீனவர், விளங்கும் தன்மையுடைய முத்துக்களோடு, நீண்ட பவழங்களையும் எடுத்துச் செல்வர். இத்தகைய குளிர்ச்சியான கடற்கரைப் பக்கங்களையுடைய மென்மைப் பகுதி நிலங்களும்—

பாலை நிலவளம் : காந்தளின் அழகிய மலரால் தொடுத்த கண்ணியைச் சூடியவரும், கொலை செய்தற்குரிய வில்லைக் கையேந்திய வருமான வேட்டுவர்கள், செவ்விய கொம்புகளையுடைய காட்டுப் பசுவின் இறைச்சியோடு, காட்டிலுள்ள மதத்தையுடைய யானைகளின் வெண்கொம்புகளையும், பொன்வள முடைய கடைத் தெருவுக்குக் கொண்டுசென்று, ஆண்டுத் தாம் பெறுகின்ற கள்ளுக்கு விலையாகக் கொடுக்கும், குன்றங் களிடையே அமைந்துள்ள பாலை நிலத்தவான ஊர்களும்—

மருத நிலவளம் : உரியதான காலமல்லாத காலத்தேயும் கரும்பினை அறுத்தறுத்துச் சேர்ப்பாரின் ஆரவாரமும், நெற்கதிர் முற்றியதனை அறுத்துக் குவித்த போரினைத் தள்ளி அடிப்பாரது ஆரவாரமும், பலவகைப் பூக்களைக் கொண்டு விழா நிகழ்த்துவாரது ஆரவாரமும், தேன் பாயும் மருதமரத்தை அடியோடு சாயுமாறு வெட்டிச் சாய்ப்பாரது ஆரவாரமும், நுரைகளால் வெண்மையான மேற்பரப்பைக் கொண்ட செம்புனல் பரந்து இடங்கள் தோறும் வெள்ளமாகப் பரவுங் காலத்து எழும் ஆரவாரமும், பல வைக்கோற் புரிகளாலே