பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

பதிற்றுப்பத்து தெளிவுரை

பெருமிதம். ஆர - உண்ண. தெய்வத்திற்கிடும் பிண்டத்தைக் காக்கையும் பருந்தும் உண்ண, அவற்றை அத்தெய்வம் ஏற்றதாகக் கொள்ளல் மரபு; இம்மரபு இன்றும் தமிழ் மக்களிடையே நிலவக் காணலாம்.

ஓடா - புறமிட்டு ஓடாத. பூட்கை - மறக் கோட்பாடு. ஒண்பொறி - ஒள்ளிய செயல்கள் பொறிக்கப் பெற்ற; இனி ஒள்ளிய அரும்பு வேலைப்பாடுகளும் ஆம். ததைந்த - அமித்த. புகல்தல் - விரும்பல். உருமு - இடி. கொள்ளை - யாழிசை. பெருஞ்சோறு - பெரிய பலியூட்டு. உகுத்தற்கு - அழித்தற்கு. தழங்குதல் - ஒலித்தல்; 'நின் தழங்கு குரல் முரசம் என்றும் இவ்வாறே முழங்குக' என்று வாழ்த்துகின்றனர். இதனைப் போர்மேற் செல்லும் மன்னன் கொற்றவையைப் பேணியவனாகத் தன் வீரர்க்கு அளிக்கும் பெருஞ்சோற்று நிலை என்றும் கொள்வர்.

பெருஞ்சோற்று நிலையைப் பற்றிய தெளிவான கருத்து இப்பாட்டாலே அறியப்படுகின்றது. பண்டைத் தமிழ் அரசர்கள் தம்மளவிலேயும் பெருமறவராக விளங்கினார்கள். பேரறிஞர்களாகவும் பெருங் கொடையாளர்களாகவும் பெரும் மனிதாபிமானம் உள்ளவர்களாகவும் விளங்கினர்.

இத்தகைய எல்லாம் சிறப்புற அமைந்து விளங்கிய செவ்வியினாலேதான் அவர்களின் புகழ் காலவெள்ளத்தையும் கடந்து நிலைத்து நிற்கின்றது. பண்டைப் புலவர்கள் போற்றுதற்குரிய செவ்வியும் இந்தச் சிறப்புத்தான், வெம்மையும் தண்மையும் ஒன்று கூடிய நிலை. போர்க்களத்திலே கொடிய வெம்மை; மக்களிடத்திலே அளவற்ற தண்மை; இந்த இணைவுதான் பெருமை தந்தது, புகழைத் தந்தது. புலவர்களைப் பாடவும் வைத்தது!

மேல்நிலை ஆட்சிப் பொறுப்பிலே அமர்வோர் என்றும் போற்றிக் கொளற்குரிய ஆட்சிச் சால்பும் இதுவே யாகும். இதனைப் பிற சங்கப் பாடல்களும் உரைக்கும்.