உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

பதிற்றுப்பத்து தெளிவுரை


கட்குக் காவலாகக் கொண்ட கணைய மரங்களைப் போல, நேராக நிமிர்ந்து விளங்கும் பருத்த அழகிய வலிமிக்க முழவைப்போன்று விளங்கும் தோள்களை உடையவனும், வெண்மையான அலைகள் விளங்கும் கடலாலே சூழப்பெற்ற இவ்வுலகத்துத் தன் வளவிய புகழை நிலைபெறச் செய்தவனும், வகைமையாற் சிறந்த செல்வத்தை உடைவனுமான 'வண்டன்' என்பானை நீயும் ஒத்தவனா யிருக்கின்றனை! வண்டினம் மொய்க்குமாறு நறுமணத்தைக் கொண்டதும், தழைத்து நீண்டதுமான கூந்தலையும், அறம் நிரம்பிய கற்பினையும், காதுகளின் குழைகட்கு விளக்கம் தருவதாக விளங்கும் ஒளியுடைய நெற்றியையும், பொன்னின் அணிகலனுக்கு விளக்கந் தருவதாகிய அழகிய வளைந்த கொப்பூழினையும் கொண்டவள், வானகத்தே உலவும் கற்புடைய மகளிர் எழுவருள்ளும் சிறந்தவளான செம்மீனாகிய அருந்தியைப் போன்றவள், நின்னுடைய தொன்மைவாய்ந்த அரண்மனைக்குச் செல்வியாக விளங்கும் நின் தேவியாவாள்.


நின் போர்முரசு நிலத்து மக்கள் அதிர்ச்சிகொள்ளுமாறு என்றும் ஒலித்தலைச் செய்யாது. வெற்றிக் களத்தேயே எழுச்சி பெற்று அகன்ற நின் முரசம் வெற்றியை மேற்கொண்டு முழங்குவதாகும். வேற்படைகள் தம்முள் நெருங்கிய போர்க்களத்தே, ஒடுங்கிய பனம்பூ மாலையினையும், பொற்கழலினையும், வலிய கால்களையும் உடையவரான நின் படைமறவர், அடங்காத பகைவரது ஊக்கம் எல்லாம் அறவே அழியுமாறு, அவர்களைக் களத்தினின்றும் தோற்று ஓடச் செய்வர். அவ்வாறு அவர்கள் புறங்கொடுத்து ஓடும்பொழுது, அவர்களின் முதுகின்புறத்தே, தம் கைவேலை நின் மறவர் படைத்தலைவர்கள் ஒருபோதுமே எறிந்து அறிய மாட்டார்கள்! நின்பால் அன்பு உடையவர்களுக்குத் தாம் காவலரணைப் போல அமைந்து அவரைக் காத்தும், நின் பகைவருக்குச் சூர்த்தெய்வத்தைப்போல அச்சந்தரக் கடுமைகாட்டியும் விளங்குவது, நின் தானை! இவ்வாறாகப் போர்த்தொழிலிலேயும் ஆட்சி நலத்திலேயும் மேம்பட்டு விளங்குவோனாகிய தலைவனே! நீதான் பலவகையினும் மாட்சிமைப்பட்டாய். நீ வாழ்க!

சொற்பொருளும் விளக்கமும்: தலைமணத்தல் - பொருந்தியிருத்தல். தலை - இடம். மணத்தல் - கூடியிருத்தல். குழூஉ -