பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

பதிற்றுப்பத்து தெளிவுரை

மகிழ் மகிழின், யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே” (புறம் . 123) என்னுமாறு போலக், கள்வெறியால் அவற்றைத் தந்தானல்லன் என்பார், ‘சிறுமகிழானும்’ என்றனர். ‘பெருங்கலம் வீசல்’ அவன், தன் தகுதிநோக்கிச் செய்ததாகும்.

மருது - மருதமரம். இழிழ்தல் - இனிதாக ஒலித்தல். நளி - செறிவு. துறை - நீரில் இறங்குதற்குரிய நீர்த்துறை. காஞ்சி - ஒருவகை மரம்; காஞ்சிரம் என்றும் சிலர் கூறுவர். முருக்கு - முள்ளுமுருக்க மரம்; இதன் பூக்கள் தீப்போற் சிவந்த நிறமுடையன; வெள்ளைப் பூக்களைக் கொண்டவையும் உள்ளன; இங்குக் குறித்தது சிவப்புப் பூக்களையுடைய மரம்; இதனைக் கல்யாண முருங்கை என்பர். தாழ்பு - தாழ்ந்து தொங்குதல். உறழ் - ஒத்த; உவம உருபு. செந்நிறப் பூக்கள் படிந்திருத்தலால் பொய்கைக் கரை நெருப்புப் படிந்தாற் போலத் தோற்றியது என்றனர். கழனி வாயில் பழனம் - வயல்களுக்கு முன்பக்கமாக அமைந்துள்ள குளம்; மருத நிலத்து இவை பரவலாகக் காணப் பெறுவன. படப்பை - விளை நிலங்கள். ‘மருள்’ - உவம உருபு. வளைமகள் - வளையணிந்த குறுமகள். குறுதல் - பறித்தல். குறுமகளிர் தழையும் பூவும் கொய்து விளையாட்டயர்தலால் சிதைந்த காஞ்சி என்க; இந் நயம்பற்றி இப்பாட்டின் பெயர் அமைந்தது என்பர். இவை, குட்டுவனோடு போரிடா முன்னர் விளங்கிய பகைவர் நாட்டு வளங்களாம்.

நயந்து - விரும்பி; விருப்பம் ஆவது, சேரலாதன்பாற் பரிசில் பெறுதல். வழங்குநர் - வழிச் செல்வார். மருங்கு - வழி. தூர்ந்து - இல்லையாகும்படி புல்லால் மூடப்பெற்று. கவின் - அழகு. ஆற்ற - வழியிலுள்ள. ஏறு - மரையாவின் ஏறு; மரையா - காட்டுப்பசு. அமர்தல் - விரும்புதல். வைப்பின - ஊர்களையுடைய நாடு. வைப்பு - ஊர். மைந்து - வலிமை. மலிதல். மிக்குப் பெருகுதல். பெரும் புகழ் - பெரிதாக எழுந்த புகழ்; அது மறம் வீங்கு பெரும் புகழ் என்பவர், மைந்து மலி பெரும்புகழ் என்றனர். மலைதல் - போரிடல். போரெதிர் வேந்தர் - போருக்கு எதிர்ப்பட்ட பகைவேந்தர். தார் - தூசிப் படை.

முன்னர் யாம் கண்ட வளநாடு, இடையில் நின்னைப் பகைத்த பொருந்தாச் செயலின் பயனால், இப்போது காடாகக் கிடந்த அவல நிலையைக் கண்டு வந்தோம் என்பதாம்.