உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

115


'கோடுறழ்ந்தெடுத்த’ என்னும் பதிற்றுப்பத்துச் செய்யுளில் அகமதில் - மதிலென்றும் புறமதிலே இஞ்சியென்றும் கூறப்படுகிறது. மதிலை ஒட்டி உட்புறம் அமையும் மேடைக்கு அகப்பா என்று பெயராம்.93<\sup>

தொலைவில் பகைவர் வருவதை முன்கூட்டியேநின்று காண முடிந்தபடி புறமதிலின் பல திசைகளிலும் அட்டாலை என்னும் சிறுசிறு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருப்பதும் உண்டு. இக்கோபுரங்களைக் காப்பார் ‘அட்டாலைச் சேவகர்’ எனப்பட்டார். மதில் காவலர் மதில் நாயகர் எனப்பட்டார்.94

மதிலுள்ள நிலவரண் வெள்ளிடை நிலம், தண்ணடை நிலம் என இருவகைப்பட்டன. புறமதிற் புறத்தே ஆறும் கடலுமாகிய இயற்கை நீர்நிலையாகவும் அகழி அல்லது கிடங்கு என்னும் செயற்கை நீர்நிலையாகவும் இருக்கும் அரண். காட்டரண் மரங்களடர்ந்த பகுதியாயிருக்கும். மக்கள் விரைந்து கூட்டமாக மேலேற முடியாததும் ஏறினால் கற்களை உருட்டித் தடுக்கக் கூடியதுமாய் இருப்பது மலையரண். 95

இந்த அரண்களை எல்லாம் நுணுக்கமாக அமைப்பதற்குத் தேவையான பாதுகாப்புப் பொறியியல் அல்லது இராணுவப்பொறியியல் வல்லமை (Defence Architecture or Military Engineering) பழந்தமிழா்க்கு இருந்ததை மேலே காட்டிய நூற்சான்றுகளிலிருந்து அறியமுடிகிறது.

அரசன் வாழும் இல்லம், இறைவர்க்கான கோயில் இரண்டையும் பற்றிய செய்திகள் கிடைப்பதுபோல் தனிப்பட்ட மக்கள் வீடுகள் பற்றிய விவரங்கள் குறைவாகவே கிடைக்கின்றன. அப்படிக் கிடைக்கும் விவரங்களும் மாட மாளிகைகள் வணிகர் குடியிருப்புக்கள் பற்றியனவாகவே உள்ளன. இக்காரணங்களால் திராவிடக் கட்டடக் கலையின் காலம் கோயில்களின் கட்டடக் கலையோடு சார்த்தியே ஆராயப்பட்டுள்ளது.