பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



ஆயினும் இவை இரண்டும் ஏரிகள் என்ற கருத்துப்படி 'இருகாமத்து இணை ஏரி' என்று கூறும் வழக்கும் இருந்தது41 என்று தெரிகிறது. அறிஞர் சாமி சிதம்பரனார் தமது பட்டினப்பாலை ஆராய்ச்சியில் காவிரிப் பூம்பட்டினம் பற்றிக் கூறுவதாவது :

“அங்கே பல பொய்கைகள்-அதாவது மலர் பூத்த தடாகங்கள் இருக்கின்றன. அத்தடாகங்களின் உயர்ந்த கரைகள், மாசு மறுவற்ற வானத்தில் சந்திரனுடன் மகம் என்னும் நட்சத்திரம் சேர்ந்து விளங்குவது போல் காணப்படுகின்றன. அந்தப் பொய்கைகளிலே பலவித வாசனை பொருந்திய பல நிற மலர்கள் பூத்துக் கிடக்கின்றன. இதனால் அந்தப் பொய்கைகளும், பலவித நிறங்களிலே காட்சியளிக்கின்றன”.42

கோயில்கள்

காவிரிப் பூம்பட்டின நகரின் அமைப்பில் பல்வேறு கோயில்கள் இருந்திருக்கின்றன. அவை கோட்டங்கள் என்று வழங்கப்படுகின்றன. அவை:

சிவன் கோட்டம், திருமால் கோட்டம், பலராமன் கோட்டம், இந்திரன் கோட்டம், முருகன் கோட்டம், சூரியன் கோட்டம், சந்திரன் கோட்டம், புத்தர் கோட்டம், அருக தேவன் கோட்டம்.

இதனைச் சிலப்பதிகாரம் பின்வருமாறு கூறும்.

அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர் வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்
உச்சிக்கிழான் கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்
வச்சிரக் கோட்டம், புறம்பணையான்வாழ் கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம்43

இந்திர விகாரம் ஏழு

காவிரிப் பூம்பட்டினத்தில் இந்திரனால் நிருமிக்க்ப் பெற்ற புத்த விகாரங்கள் ஏழு இருந்தன.