உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



உலக அறவி

காவிரிப் பூம்பட்டினத்தின்கண் அமைந்திருந்த ஐவகை வனங்களுள் ஒன்றாகிய உவ வனம் என்னும் மலர்ப் பூங்காவின்53 மேற்றிசையில் அமைந்த சிறிய வாயில் வழியே சென்றால் - உவ வனத்திற்கும், ந்கரின் இடுகாடாகிய சக்கரவாளக் கோட்டத்திற்கும் நடுவே, உலக அறவி என்னும் பொது அம்பலம் இருந்தது.54

அந்த உலக அறவியில், காவிரிப் பூம்பட்டினத்தின் நகரத் தெய்வமாகிய சம்பாபதி கோயிலும், அங்குள்ள பொது அம்பலத்தின் தூண் ஒன்றில், கந்திற்பாவை என்ற தெய்வத்தின் உருவமும் இருந்தன என்பதைச் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் கூறியுள்ளார்.55 உலக அறவிக்குள் நுழையும் வாயில் பலரும் ஒரு சேரப் புகுமளவு பெரிதாகவும் அகலமாகவும் அமைந்திருந்ததாகச் சாத்தனார் கூறுகிறார்.56

சக்கரவாளக் கோட்டம்

காவிரிப்பூம்பட்டினம் தோன்றிய காலத்திலேயே, அதனுடன் தோன்றியதாகக் கூறப்படும் இடுகாடு, சக்கரவாளக் கோட்டம் எனப்பட்டது. ஊர் மக்கள், அதனைச் சுடுகாட்டுக் கோட்டம் என்றே கூறுவர் எனவும் மணிமேகலை உரைக்கிறது.57

அக்கோட்டம் நான்கு பக்கத்திலும் பெரிய மதில்களாற் சூழப்பட்டிருந்தது. அதன் உள்ளே காளி கோட்டமும், வேறு பல்வகை மன்றங்களும், தவத்தவர், அரசர், கற்புடை மகளிர் முதலியோர்க்கு எழுப்பப்பட்ட கோட்டங்களும் இருந்தன.58

புகார் நகரில் சக்கரவாளக் கோட்டம் அமைந்திருந்தது பற்றி மணிமேகலை விரிவாகக் கூறுகிறது. இந்தச்