பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


புலவர்களும் மதுரையில் கூடியிருந்திருக்கிறார்கள். இன்றைய ஆலயத்துள்ளும் சங்கத்தார் கோவில் என ஒரு பகுதி உள்ளது. இன்றைய மதுரையிலும் கூடப் பழைய நகரப் பகுதி கோவிலை மையமாகக் கொண்டு அம்போதரங்கமாக விரிந்து, ஆடி வீதி (முதற் சுற்று) சித்திரை வீதி (இரண்டாம் சுற்று) ஆவணி மூலவீதி (மூன்றாம் சுற்று) மாசி வீதி (நாலாம் சுற்று) வெளிவீதி (ஐந்தாம் சுற்று) எனத் தாமரைப் பூப் போலவே அமைந்துள்ளது.ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழாவின் பெயராகவே அமைந்துள்ளது, மதுரையின் நகரமைப்புச் சிறப்பாகும்.

இன்று சிறிய அளவில் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள பழைய சொக்கநாதர் கோயிலும்---கடம்பவனத்திற் கண்ட பழைய கோயிலும் ஒன்றோ என்றும் கருதுவாருமுண்டு.

இப்போது நகர அந்திக்கடைப் பொட்டலருகே கடைவீதியில் இருக்கும் பழைய கோட்டைப் பகுதி அரண்மனையாயிருத்தல் கூடும். மேற்கு வெளி வீதியிலுள்ள இடிந்த கோட்டைப் பகுதி மேற்கு மதில் வாயிலாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

நகரப் பரப்பும் மக்களும்

சிலப்பதிகாரத்தில் பூம்புகார் நகர் நிலப்பரப்பு. மக்கள் தொகை பற்றி அகச்சான்று நூலுக்குள் கிடைத்தது போல் மதுரையைப்பற்றி நேர்முகச் சான்று எதுவும் கிடைத்திலது எனினும் திருவாலவாய், திருப்பூவணம், திருமுடங்கை, திருவூர்103 என்ற நான்கு மாட எல்லைகளைக் கொண்டு காணும்போது, பூம்புகார் நகரின் பரப்பை ஒத்த அளவு மதுரையும் இருந்திருத்தலை உய்த்துணர முடிகிறது. எழுகடல்,104 மெய்காட்டும் பொட்டல்,105 வெள்ளியம்பலம்106 அக்கசாலை, அந்திக்கடை,செம்பியன் கிணறு, கோவலன் பொட்டல் முதலிய வரலாற்றுத் தன்மை வாய்ந்த பழம் பெயர்கள் இன்றும் அப்படியே இடங்களுக்கு வழங்கி வருகின்றன.