உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

59


மனைகோலும் அடையாளமாக அகழ்ந்த குழியிலிருந்து எடுத்த மண்ணை மீண்டும் அதே குழியில் இட்டு நிரப்பிப் பார்க்க வேண்டும்.

அம்மண் குழியையும் நிரப்பி மீதமும் எஞ்சுமானால் அங்கே கட்டப்படும் மனையில் வருவாயும், செல்வமும் பெருகி ஊதியம் உயரும் எனக்கொள்ளல் வேண்டும். இட்ட மண்ணினால் குழி சரிசமமாக நிரம்ப மட்டுமே செய்யுமாயின் அம்மனையில் வாழ்பவனின் வரவுக்கும். செலவுக்கும் சமமாயிருக்கும் என்று கொள்ள வேண்டும். உயர்வுமின்றித் தாழ்வுமின்றி எல்லாம் சமமாய் இருக்கும் என்க. இட்டமண் குழியை நிரப்பப் போதாமல் குறைந்து விடுமாயின் வருவாய் குன்றிச் செலவு மிகுதியாகி வறுமை வந்தெய்தும் எனக் கொள்ளவேண்டும். இது தவிரத் தேங்காய்க் குறி என ஒன்றும் இருந்தது.37

தேங்காய் அடையாள முறை

மனை மங்கலம் செய்யும்போது அங்கு வழிபாட்டின் நிமித்தம் உடைக்கப்படும் தேங்காய் எவ்வாறு உடைகிறது என்பதைப் பொறுத்து நன்மை தீமைகள் கணிக்கும் நிலையும் இருந்தது. அவை வருமாறு: 38

(1) தேங்காயின் குடுமி உள்ள முடிப்பக்கம் (கண்கள் உள்ள பக்கம்) பெரிதாகவும் அடிப்பக்கம் சிறிதாகவும் உடைந்தால் அந்த மனையில் திருமகளின் அருள் பொங்கிச் செல்வம் பெருகும்.

(2) முடிப் பக்கம் மும்மடங்கும், அடிப்பக்கம் ஒரு மடங்குமாக உடைந்தாலும் அங்கே கட்டப்படும் மனை யில் மிக்க உவகை விளையும்.

(3) முடிப்பக்கம் ஐந்தில் மூன்று பங்கும் அடிப்பக்கம் ஐந்தில் இரு பங்குமாக உடைந்தால் அக் குடும்பம் நலமாயிருக்கும்.