பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்

முழுமைக்கும் சேர்த்து வைக்கும் தொம்பை அமைக்கவும், வடக்கில் பசுவிற்கான தனித்தொழுவம் மட்டும் அமைக்கவும் ஏற்ற வகையில் வீடு கட்ட வேண்டும். 50

இவ்வாறு முறை அமைத்தால் வீட்டில் வசிப்பவருக்கு ஏற்றமும், நலனும், உயர்வும் கூடிப் பெருகும் என்பது பயனாக உரைக்கப்பட்டுள்ளது.

எருமை முதலிய கால்நடைகளைக் கட்டும் இடத்திலிருந்து பசுத் தொழுவம் தனியே உயர்வு கொடுத்துப் பிரிக்கப்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

வீட்டிற்குள் கிழக்குத் திசையில் குளிக்கும் இடமும் அக்கினி மூலையில் உணவு சமைக்கும் இடமும் ஏற்படுத்தப் பெறவேண்டும். 51

தெற்கில் கணவன் மனைவி உறங்கும் படுக்கையறையும், மேற்கில் சமைத்த உணவினை அமர்ந்து உண்ணும் இடமும் அமைந்திருப்பது நல்லதாம். உணவு சமைக்கு மிடமும் அமர்ந்து உண்ணும் இடமும் வேறு வேறாய் அமைந்திருத்தல் குறிப்பிடத்தக்கது. வாயு மூலையில் பசுத் தொழுவமும், வடக்கில் தானியங்கள் சேர்த்து வைக்கும் இடமும், ஈசான்ய மூலையில் வழிபாட்டு அறையும் இருந்தால் அவ்வீட்டிற்குரியோன் அரச யோகம் பெறு வான் என்கிறது மனை நூல்.

முழக்கோல் அளவு

பழைய நாட்களில் நிலத்தை அளக்கவும் கணக்கிடவும் முழக்கோல் பயன்படுத்தப் பெற்றது. ‘முழக்கம்பு’ என இதற்கு மற்றொரு பெயரும் உண்டு.52 அதைப் பற்றிய விவரம் பின்வருமாறு:

அணு எட்டுக் கொண்டது -புல் நுனி

புல் நுனி எட்டுக் கொண்டது - நுண்மணல்

நுண்மணல் எட்டுக் கொண்டது -எள் .