பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் மூன்று

கட்டடக் கலையும் தமிழர் பண்பாடும்

சங்க நூல்களில் கட்டடக் கலை பற்றிய செய்திகள் அங்கங்கே காணக் கிடைக்கின்றன. கட்டடக் கலையில் தமிழர்க்கு இருந்த ஈடுபாட்டையும் அக்கறையையும் அவற்றிலிருந்து அறிய முடிகிறது.

கை புனைந்து இயற்றாக் கவின் பெறுவனப்பு 1

என இயற்கையைத் திருமுருகாற்றுப்படையில் வருணித்த அதே நக்கீரர் பத்துப்பாட்டில் தம்முடைய மற்றொரு பாட்டாகிய நெடுநல்வாடையில் செயற்கைக் கலையாகிய கட்டடக்கலை பற்றிக் குறிப்பிடுகிறார்.

இக்காரணத்தால் அறிஞர்கள் நெடுநல்வாடையைக் கட்டடக்கலை நூல் என்னும் பொருள்படுகிற சிற்பப்பாட்டு என்றே கூறலாம் என்னும் அளவு துணிபு கொள்கின்றனா்.

“நக்கீரர் நெடுநல்வாடையில் பாண்டிமாதேவி படுத்திருந்த கட்டிலின் மேல் விதானத்துத் திரைச்சீலையில் மெழுகு வழித்து, ஓவியம் தீட்டியிருந்ததைக் குறிப்பிடுகிறார். அதில் மேடராசியில் ஞாயிறு திரியும் காலத்தில் திங்களஞ் செல்வனுடன் உரோகிணி மகிழ்ந்திருக்கும் காட்சி வரையப் பெற்றிருந்தது.