பக்கம்:பாற்கடல்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

லா. ச. ராமாமிருதம்


‘மன்னி’ என்று அழைத்து, ஊருக்கே மன்னியாகி விட்டாள். பாட்டி எங்களுக்கும் மன்னியான கதை இதுதான்.

குடும்பம் எப்போது உடைந்தது? உடைந்ததா? அத்தியாவசியத்தால் பிரிந்ததா? நாஸுக்கில் பிரிந்ததா? மன்னி மூடின கதவு. எதற்கும் காரணம் மன்னியில்லை. அதனால் அவளுக்குத் தெரியாது. எல்லாமும் இருந்திருக்கும். சகோதரர்கள் ஆறுபேரும் ஆறு திக்குகள் ஆச்சே!

இத்தனை பேர் சேர்ந்து இருந்த சமயத்திலும், பிரிந்து போன பின்னர், நாள் கிழமையென்று, ஒன்று சேரும் சமயத்திலும் உழைப்பு என்னவோ மன்னியுடையது தான். விடிகாலை சாணி தெளிக்க எழுந்தாளெனில் இரவு, இருக்கிற அழுக்கு, கல்லிட்டுவிட்ட தலையணையில் தலை சாய்க்க மணி பத்து, பதினொன்றாகிவிடும். வாரத்துக்கு இரு முறையாகினும் மாப்பிள்ளை வாத்தியார் விகாரி போய் வந்து இரவு பன்னிரண்டு மணிக்குக் கதவைத் தட்டினால், எழுந்து கதவைத் திறந்து அவருக்குச் சாதம் போட்டு, பிறகு தான் சாப்பிட்டுவிட்டு இடையில் தேக அலுப்பில் முனகினால் 'கும்பா கும்மா' - ராக்கூத்து இன்னும் நீடிக்கும்.

அபூர்வ இடைவேளைகளில் மன்னி பிறந்தகமும் போய் வருவாள். இதோ வாளாடி - தானே! காலையில் போனால் மாலையில் அநாயாசமாகத் திரும்பி விடலாம். நான் ரயிலை மனத்தில் வைத்துக்கொண்டு சொல்லவில்லை.

அந்தநாள் எல்லாமே கால்நடைதான். திரும்பி வரும்போது இடுப்பில் மூட்டைகளோடுதான் வருவாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/144&oldid=1534011" இலிருந்து மீள்விக்கப்பட்டது