பக்கம்:பாற்கடல்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

153


சித்தாந்தம் இல்லையா? என் தாயின் சொல் இப்போது நினைவுக்கு வருகிறது:

“பிடித்தால் சாப்பிடு.

பிடிக்காவிட்டால் கடித்து முழுங்கு.“

துப்பு என்று அவள் போதிக்கவில்லை. பாற்கடலில் வந்த ஆலகால விஷத்தைக் கூட ஆண்டவன் வெறுமனே விட்டு வைக்கவில்லையே! பாற்கடலில் தோன்றியவற்றில் அவன் பங்கு அது.

இப்போது சோதனைகள் நமக்குக் குறைவாகவா இருக்கின்றன?

இந்தப் பக்கங்களை நான் மதுரையில் உட்கார்ந்து கொண்டு எழுதுகிறேன்.

இங்கு வந்து இருபது நாட்களுக்கு மேல் ஆகின்றன. இன்னும் நான் கோயிலுக்குள் அடியெடுத்து வைக்கவில்லை. இன்னும் அதற்கு வேளை கூடவில்லை.

முதல் முதலாக நான் மதுரையில் அடியெடுத்து வைத்தது 1969இல் என்று நினைக்கிறேன். இரவு வேளை. டவுன் ஹால் ரோடு கட்டடங்களின் ஓரமாக நடை பாதைக்காக ஓடும் சிமிட்டி மேடைமேல் (platform) சோளத் தட்டுகளில் வழிய வழிய மலைப் பழச் சீப்புகள், வேளையில்லை, போதில்லை, (plastic) கண்ணாடிச் சாமான்கள், ரிப்பன்கள், பிஸ்கட், சோடா, காப்பிக் கடைகள், இரவைப் பகலாக்கிய மெர்க்குரி வெளிச்சம், இட்டிலிக் கடைகள், இரவு ஒரு மணிக்கு ஆவி பறக்க, சுடச்சுட இட்டிலிப் பானையடியில் நர்த்தனமாடும் தீ நாக்குகள். கம்மென்று மல்லி மணம் மதுரை மல்லி, தெருவில் ஜேஜே என்று கூட்டம். ஏதோ கலியாண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/159&oldid=1534069" இலிருந்து மீள்விக்கப்பட்டது