பக்கம்:பாற்கடல்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

லா. ச. ராமாமிருதம்


அடிப்படை லா.ச.ரா.வின் கீர்த்தி பற்றி அவ்வளவு தீர்மானமான எண்ணமோ?

ஆனால் இத்தனை வயது எழுதியும், லா.ச.ரா. எத்துணை சின்னஞ்சிறிய சுண்டெலி என்று சமீபத்தில் கூட நிரூபணமாயிற்று.

மதுரையில் (இப்பத்தான் திரும்பி வந்தேன்) என் நண்பர் ஒரு புது ஆளுக்கு என்னை அறிமுகப் படுத்தினார்.

“இவர் யார் தெரியுமோன்னோ ? லா.ச.ரா. எழுத்துலகில் ஜாம்பவான்.“

“ஆமாங்க, இந்த மாதங்கூடக் 'கலைமகளில் இவர் கதை படிச்சேன், இவருடைய புதுக்கவிதை ஒண்ணு போனவாரம் 'கல்கி'யில் வந்திருந்ததல்ல ?”

எனக்குப் 'பக்'கென்று சிரிப்பு வந்துவிட்டது. நண்பர் முகம் சுண்டிற்று. புது ஆள் குறிப்பிட்ட இரண்டு பத்திரிகைகளிலுமே என் எழுத்து வெளியாகி இருபது வருடங்களுக்கு ஏறக்குறைய இருக்கும்.

இதுபோன்ற வெடிகளை எழுத்தாளனைப் பற்றிய விகடத் துணுக்குகளில் சேர்த்துக்கொள்ளலாம். விகடத் துணுக்குகளுக்கென்றே எழுத்தாளர்கள் இப்போது தனிக்கிளை பிரிந்து அவர்கள் தொழிலும் மும்முரமாக நடக்கிறதே?

வந்திருந்தவர்களில் ஒரு மாமி - ஒரு பாட்டி என்று சொல்லட்டுமா - அம்மாவுக்கு அருகே உட்கார்ந்திருந்தவள் அம்மாவின் மடியில் செல்லமாகக் கையை வைத்துக் கொண்டாள். அவளைத் தொட்டுக் கொள்ளணுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/182&oldid=1534285" இலிருந்து மீள்விக்கப்பட்டது