பக்கம்:பாற்கடல்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

லா. ச. ராமாமிருதம்


விதவிதமான விஸ்தரிப்பு - ருசிகள் தனித்தனி, அவ்வளவுதான்.

நன்றாக உழை
நன்றாக உண்
நன்றாக உறங்கு

காய்ந்த வயிற்றில் எந்தக் கலையும் வளராது. அதுவும் இலையும் காயும் போல்தான்.

ஆனால் முட்டிய வயிறும் அதற்கு உதவாது. நீர்ப்பாய்ச்சல் அதிகமானால் செடி அழுகிவிடுவது போல். ஆகவே –

கூடவே பசித்திரு.

உடல் ஆரோக்கியத்துக்கு மட்டும் இல்லை - எந்தக் கலைக்கும் இந்தச் சூத்திரம் பொருந்தும். பசி மிகவும் ஆரோக்கியமான உணர்ச்சி, உடல் பசியை மட்டும் நான் குறிக்கவில்லை.

எதையும் பழிக்காமல்
எதிலும் நேர்த்தி
ஆனந்தத்தின் தூய்மை இதுதான்.

என்னைப் பொறுத்தவரை என் ருசிகள் உணக்கைதான். 'சீலம்' என்று சமயத்துக்கு, வீட்டுப் பெண்களின் அவ்வப்போதைய மனநிலைக்கேற்றவாறு, செல்லமாகவும், எரிச்சலிலும் சொல்வார்கள். வீட்டில் மட்டும் இல்லை. என் நாக்கை வளர்த்ததில் என் ரஸிகர் குழாத்துக்கும் (அவ்வட்டம் எவ்வளவு சிறியதாயிருப்பினும்) பெரும் பங்கு உண்டு. டில்லியிலிருந்து கன்யாகுமரி வரை அவர்களுடைய கரை கடந்த உபசரிப்புக்கும் திணிப்புக்கும் ஆளாகிப் புனிதனாகி இருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/198&oldid=1534301" இலிருந்து மீள்விக்கப்பட்டது