பக்கம்:பாற்கடல்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

201


கூடத்தில் அறையில் மணியும் குழலும் தைத்தும் கோத்தும் தொங்கவிட்டிருக்கும் திரைகளைத் தள்ளிக் கொண்டு தான் நுழையணும். 'கிளு கிளு குலு குலு,' வேடிக்கையா இருக்கும்.

சிலர் மத்தியான வேளைக்கு டிபன் டப்பாவில் சாதமோ, முறுக்கு, சீடை, தேங்குழல் இதுமாதிரி கொண்டு வந்திருப்பா. எல்லாரும் பங்கிட்டுக் கொள்வோம். வாத்தியார் மாமி ஒண்ணுகூடத் தன்னுதுன்னு தெறிக்கமாட்டாள். கெட்டிக்காரி. தவிர எப்படிக் கட்டுப்படியாகும்? நானும் அத்தி பூத்த மாதிரி என்னிக்கானும் பண்ணுவேன். பஜ்ஜி, பக்கோடா. பயந்தான். எண்ணெய்ச் சட்டி இந்த ரேட்டுக்கு வெச்சுதுன்னா ஊருக்கு அனுப்பறதிலே துண்டு விழுமே, அவாளுக்குக் கணக்குச் சொல்லணுமே!

அலுப்புத் தட்டாமல் இருக்க, முறை போட்டுண்டு ஒரு மாமி, ராமாயணம், பக்தவிஜயம்னு ஏதேனும் புண்ணிய கதை உரக்கப் படிப்பா, அவளுக்கு நான் ஒரு தம்ளர் காபி கொண்டு வந்து கொடுப்பேன். எங்களுக்கே பெங்களூர் வந்துதான் கிலுப்தமா காபிப் பழக்கமாச்சு. சந்தோஷமா பேசிண்டும் சிரிச்சுண்டும் வகுப்பு நடக்கும். நான் கத்துண்டேனே ஒழிய, நம் வீட்டில் திரை வைத்துத் தொங்கவிடத் துணியேது? புதுசா வாங்க வேண்டாமா?

அண்ணா சாயந்திரம் பள்ளிக்கூடத்திலேருந்து வந்து காபி சாப்பிட்டுவிட்டு உடனே ட்யூஷனுக்குக் கிளம்பிவிடுவார். இரவு எட்டு, ஒன்பதுக்குத்தான் திரும்புவார்.

காலையிலேயே கூடத்தில் மூணு நாலு ட்யூஷன் நடக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/207&oldid=1534310" இலிருந்து மீள்விக்கப்பட்டது