பக்கம்:பாற்கடல்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

லா. ச. ராமாமிருதம்


தாளக்கூடியவர் அல்ல. அம்மா நிறைய அனுபவித்துவிட்டாள். ஆனால் முதல் துயரம் (அல்லது முதல் காதல்) பிறவியின் முதல் கவிதையாக அமைந்து விடுகிறது.

எழுதினால்தான் கவிதை அல்ல. வார்த்தைகள்தான் கவிதை அல்ல. கவிதையென்று தானே உணர்ந்தால் தான் கவிதை அல்ல. சிறுவயதிலேயே அம்மா தாயை இழந்தாள். அதற்கும் முன்னர் தந்தையை இழந்தாள். ஆனால் அந்தத் துயரங்கள் அவளுடைய கவிதை அல்ல. அண்ணாவுக்கும் அம்மாவுக்குமிடையே காதல் கண்டதால் அவர்கள் திருமணம் நடந்தது என்றில்லை. ஆகையால் அவர்கள் திருமணமும் கவிதையில்லை. உண்மையின் - இல்லை, அது சொல்வதும் போதாது - சத்தியத்தின் கோடரி எப்பொழுது உள் பாய்கிறதோ, அப்போது நான் சொல்லும் கவிதை நேர்கின்றது. கோடரி மேல் மரம் வளர்ந்துவிடுகிறது. ஆனால் உள்ளே கோடரி பாய்ந்த இடத்தில், பாய்ந்தபடி, பத்திரமாய்.

இந்த முதல் கவிதைக்கும் தேவியின் பாதகமலங்களுக்கும் ஏதோ பற்று இருக்கிறது. அவள் சரணம் பட்ட மாத்திரத்தில் மலரின் இதழ்கள் மேல் இதயத்தின் ரத்தச் சொட்டுகள் குங்குமச் சிதறுகளாக மாறிவிடுகின்றன.

அதை ஏற்று, அவளே நெஞ்சில் நட்டுவிடுகிறாள். அங்கு அது தெறித்துக்கொண்டு கமழ்ந்துகொண்டு, இதர சமயத்தில் இதயப் புதரில் மறைந்துகொண்டு, தனிப் பூவாய்ப் பூத்துக்கொண்டே விளங்குகிறது. ஓ, எனக்குச் சொல்லத் தெரியவில்லை. இத்தனைக் காலம் எழுதி என்ன? என் பற்றாக்குறை நெஞ்சை அடைக்கிறது.

“அந்தக் குழந்தைகள் பிறந்தது முதல் ஒரு சுகத்தை அறியவில்லை! அண்ணா வெளியூரில் படிப்பு, பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/220&oldid=1534321" இலிருந்து மீள்விக்கப்பட்டது