பக்கம்:பாற்கடல்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

லா. ச. ராமாமிருதம்


லால்பாக் - நடுவில் ஏதோ கண்ணாடியாலேயே மண்டபம் போல் ஏதோ தெரிகிறது.

பிசிர் தட்டிக்கொண்டு ஏதேதோ மைதானங்கள் கட்டடங்கள் கோபுரங்கள், தோட்டங்கள்.

Zoo, பணியாள் யாரோ, அண்ணாவிடம் காசு வாங்கிக்கொண்டு புலி வாயில் கோலைக் கொடுக்கிறான். பாதத்தால் கோலைத் தட்ட முயன்று புலி கர்ஜிக்கிறது. தலையை ஆட்டி ஆட்டி. பயமாயிருக்கிறது. அழகாயிருக்கிறது. சந்தோஷமாயிருக்கிறது.

தோ ஒரு ஹால், சுவர்களை அடைத்த அலமாரிகளை அடைத்துப் புத்தகங்களாக, வெறும் புத்தகங்களாகவே முளைத்திருக்கின்றன. ஹாலில் மேசைகள், நாற்காலிகள், தெளித்தாற்போல் அங்குமிங்குமாக நாலைந்து பேர் புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். மேசைகளிலும் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அண்ணா புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். அவர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, நகங்களைக் கடித்துக்கொண்டு, நான் பொறுமை இழந்து கொண்டிருக்கிறேன். குழந்தை இன்னும் "bore." என்று சொல்லிக்கொண்டே பிறக்கக் கற்றுக்கொள்ளவில்லை.

என் எதிரே ஒரு ஐரோப்பியப் பாதிரி படித்துக் கொண்டிருக்கிறார். மெத்தை உறைபோல் எவ்வளவு நீண்ட அங்கி! அவ்வப்போது முகம் நிமிர்ந்து என்னைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கிறார். அவர் விழி நீலம் எனக்குப் புதுமையாக இருக்கிறது. சற்று நேரம் பொறுத்து என் பக்கமாகச் சாய்ந்து என் தலைமயிருள் கைவிட்டுச் செல்லமாகத் துழாவுகிறார். அண்ணாவைப் பார்த்து என்னவோ இங்கிலீஷில் சொல்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/230&oldid=1532853" இலிருந்து மீள்விக்கப்பட்டது