பக்கம்:பாற்கடல்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

லா. ச. ராமாமிருதம்


அவள் நித்தியமானவள் என்றே எனக்குத் தோன்றுகிறது. அவளும் பிறந்த வீட்டைப் பற்றி ஒரு நாளேனும் நினைத்ததாகத் தெரியவில்லை. என் மனைவி ஐம்பதை எப்பவோ கடந்தாச்சு. ஆனால் மாதம் ஒரு முறையேனும் மயிலாப்பூர் போகத் தவறுவதில்லை. (அது என் பாக்கியம்!) இவள் போன்றவர்களுக்குப் பார்வதி நிலை புரியுமோ? சந்தேகந்தான்.

அம்முவாத்துக் கிறுக்குகளில் இதுவும் ஒன்று: வந்த மருமகளுக்குப் பிறந்த வீட்டுச் சலுகை ப்ராப்தமே இல்லை என்பதால், அவளை இழிவாகப் பேசவில்லை. நடத்தவில்லை. கஞ்சியோ, கூழோ, பட்டினியோ இருப்பதற்குப் பங்குக்கு வா. இல்லாததைக் கேட்டால் அது இங்கு இல்லை என்பதுதான் அவர்கள் கொள்கை. ஆனால் பார்வதி இந்த வீட்டுள் நுழைந்தபோது பட்டினிக் கட்டம் எல்லாம் தாண்டியாகிவிட்டது. சித்தப்பாவுக்கு Postal Audit (இப்போது DAG Audit) Posts and Telegraphs இலாகாவில் வேலை. அப்போது சம்பளம் ரூபாய் நாற்பதோ என்னவோ?

அண்ணாவுக்கு உடனேயே முஸ்லிம் உயர்தரப் பள்ளியில் வேலை கிடைத்துவிட்டது. அந்தப் பள்ளி இப்போது சொந்தக் கட்டடத்தில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இயங்குகிறது. அதனுடைய அன்றைய இடம் அண்ணைா சாலையில் (பழைய மவுண்ட் ரோடு) இன்றைய காயிதே மில்லத்தின் இடம் என்று நினைக்கிறேன். அல்லது ராயப்பேட்டையிலா? நாங்கள் குழந்தைகள் எங்களுக்கென்ன தெரியும்? இந்தச் சமயத்துக்குக் குழந்தையாயிருப்புது செளகரியமாக இல்லை? நினைவுப்பாதையில் ஒரு கோணம் அல்லது ஒரு கோணல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/270&oldid=1534358" இலிருந்து மீள்விக்கப்பட்டது