பக்கம்:பாற்கடல்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

லா. ச. ராமாமிருதம்


அடித்தாங்கல் எல்லாம் பெரிது! அவளுடைய குடும்பப் பெயர் இன்றுவரை தெரியாது. இருவரும் வாட்ட சாட்டம். ஐம்பது, ஐம்பத்தைந்து வயது இருக்கும். குழந்தை குட்டி கிடையாது. குழந்தைகள் என்றால் மிகவும் ஆசை.

அவள் வீட்டில் அரை டஜன் பூனைக்குட்டிகள் வளர்ந்தன. எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத சமயங்களில் அவை திடுக் திடுக்கென ஓசைப்படாமல் முளைப்பது தமாஷாயிருக்கும். சில சமயங்களில் திக் திக்கென்றுகூடக் கட்டிலில் மெத்தையில் இரு தலையணைகளுக்கிடையில், Table lamp இன் பெரிய Lampshadeஇன் இருட்டில் கண்கள் மட்டும் நிகுநிகு, மேசை இழுப்பில் அமுக்கி வைத்திருக்கும் ஆடைகளுக்கு அடியில், அடுப்பங்கரைச் சாம்பல் கதகதப்பில் திடீரென Ventilator இலிருந்து தொப்பு - 'மியாவ்' - அதில்தான் எத்தனை boredom அம்மியின் தோள்மேல் ஒன்று வாலை விரைத்துக்கொண்டு நிற்கும். அவள் பாட்டுக்குக் கைக்காரியத்தைக் கவனித்துக் கொண்டிருப்பாள்.

ஆனால் பொதுவாக அவள் அதிகம் வீட்டு வேலை செய்வதாக எங்களுக்குத் தோன்றவில்லை. சதா எங்களோடு பேசிக்கொண்டோ, எங்கள் விளையாட்டுகளை கவனித்துக்கொண்டோ, வெறுமனே உட்கார்ந்து கொண்டிருப்பதாகத்தான் தோன்றிற்று. இப்போது நினைவுகூட்டி எடை கட்டிப் பார்க்கையில், அம்மி துரைசானி கொஞ்சம் சோம்பேறிதான். ஆயில் ட்ரம் மாதிரி அந்த உடம்பை வைத்துக்கொண்டு, அது எப்படி வணங்கும்? ஆனால் சமைக்காமல் அடுப்புச் சாம்பல் கதகதக்குமா? சாப்பிடாமல் உடம்பு அப்படிப் பருக்குமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/274&oldid=1534362" இலிருந்து மீள்விக்கப்பட்டது