பக்கம்:பாற்கடல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

லா. ச. ராமாமிருதம்


எப்பவும் இன்முகத்துக்கும், எப்பவும் இனிய சொல்லுக்கும், குரலின் மெத்துக்கும் லக்ஷமணன், வேம்பு - இருவரில் யார் யாரை மிஞ்சியவர் என்பது எனக்கு இன்னும் திகைப்புத்தான். ’இன்றுபோய் நாளைவா’ - அதை அவர் கையாண்ட விதம் - வாய்ச் சொல் என் சிறந்த அம்சமல்ல. வேம்புவுக்கு நான் தலைவணங்குகிறேன்.

பத்திரிகைக்காக அவர் ஆற்ற வேண்டியிருக்கும் சதாவதானத்தில் அவர் முகம் சுளித்தோ, குரல் தடித்தோ இன்னும் காணப்போகிறேன். சீண்டலை வென்றவர். அவருடைய சுமுகமே அவரை ஆளும் பாணி ஆகிவிட்டது என்பது என் துணிவு.

இன்றைய எழுத்துலக ஜாம்பவான்களில் பெரும்பாலோர் ’அமுதசுரபி’யின் கலசத்தில் உண்டவர்கள்தான். நான் சுரபி வளர்த்த குட்டிதான்.

பூர்வாவைத் தொடர்ந்து எனக்குப் பேர் தந்த பல கதைகள், எழுத்தில் நான் நடத்திய சோதனைகள், பயின்ற சாதகத்தின் இடையே கிட்டிய சாதனைகள், நான் எட்ட முடிந்த ஆசைகள், முயன்ற பேராசைகள் எல்லாம் சுரபி ஆசிரியர் இடம் கொடுத்த பெருந்தன்மையால், அவருக்கு என்னிடமிருந்த நம்பிக்கை மூலம்தான், என் எழுத்துலகிற்கு ’அமுதசுரபி’ வாசற்படி.

’அமுதசுரபி’யின் உசிர்கெட்டியை, உசிர்கெட்டிக்குப் பாடுகிறேன். என் நலங்குப் பாட்டு ’அமுதசுரபி’யோடு வேம்புவுக்கும் சேர்த்துதான்.

உங்களுக்கு அவர் டாக்டர் விக்கிரமன், உரிமையாக எனக்கு வேம்பு. பெரிய சந்தர்ப்பங்களைப் புகழ்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/28&oldid=1532920" இலிருந்து மீள்விக்கப்பட்டது