பக்கம்:பாற்கடல்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

283


வெல்லமும் தித்திக்கிறதே! பத்திரமா மூடிவிட்டு வெளியே சற்று நேரம் - வெளியே என்ன, வீட்டு உள்ளேதான் – மறுபடியும் –

மறுபடியும் - போக வரப் புளியம் பொந்தில் கை விட்டுக் கொண்டிருக்கிறேன்.

இரண்டாம் வேளை குழந்தைகளுக்குச் சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது. வட்டமா எங்களை உட்கார வைத்து மன்னி, கல்சட்டியில் பழையதைப் பிசைந்து கையில் போடுகிறாள்.

“என்னடா தூங்கித் தூங்கி வழியறே?”

ஆமாம், அதென்ன அப்படியொரு தூக்கம் வரது!

கை அலம்பினதாகக்கூட ஞாபகம் இல்லை. முன் அறையில் அடுக்கி வெச்சிருக்கும் பாய் தலைகாணிமேல் விழுகிறேன். அதற்கு முன்னால் சாப்பிட்ட வாய்க்கு ஒரு பெரிய பாச்சாக் கோலிக் குண்டளவு.

ஆனால் எனக்குத் தூக்கமாக வரவில்லை. என்னவோ என் அடியில் தரை வளைஞ்சு நகர்றமாதிரி இருக்கு. சுவர் சுத்திச் சுத்தி மிதக்கிறது. கண்ணுக்கெதிரே என்னென்னவோ பெரிசு பெரிசா நான் இதுவரை பார்க்காத பூச்சிகள், புழுக்கள், பல்லிகள், முள்ளு, கொம்பு பெரிசு பெரிசா நெளியறதுகள். வெளிச்சங்கள், கலர் கலரா மாறி மாறி அதிலிருந்து இன்னும் ஏதேதோ ஐந்துக்கள், குடைகள் சிலந்தி –

பயம்...ம்...மாயிருக்கு.

“அம்மா!” அலறுகிறேன். அம்மா பதைபதைத்துப் பின்கட்டிலிருந்து ஓடி வருகிறாள். பசு மாதிரியிருக்காள். அவளைக் கட்டிக்கிறேன். சிரிக்கிறேன். அழறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/289&oldid=1534382" இலிருந்து மீள்விக்கப்பட்டது