பக்கம்:பாற்கடல்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

307


சொல்லி நிறுத்திக்கொள்கிறேன். பெண்ணுக்குப் பெண் கேட்கிறாள்.

”என்னடி உன் கழுத்தில் தொங்கல்லே!” பெருந்திரு பயப்படுகிறாள்.

பிள்ளைக்குக் கிடந்த தவத்தைக் காட்டிலும் இப்போ தாலிக்கு இருந்த தவத்தின் நெருப்பைப் பற்றி என்னால் பேசக்கூட முடியுமா?

எங்களை அழைத்துக்கொண்டு - ராமாமிருதம், சிவப்பிரகாசம், பானு - இடுப்பில் கைக்குழந்தையுடன் கையில் எண்ணெய்க் குடுவையுடன் விளக்கிட, எங்கள் வீட்டையடுத்துப் பத்துப் பதினைந்து வீடுகள் தள்ளியிருந்த பெருமாள் கோயிலுக்குப் போவாள். துவஜஸ்தம்பத்தடியில் எல்லோரும் சாஷ்டாங்கமாக விழுவோம். அண்ணாவுக்கு உடம்பு சரியாக வேண்டும். கைக்குழந்தையையும் குப்புறப் போடுவாள். அது வீல் என்று அழும்.

பட்டர் வெளியே வருவார். முறுவலிப்பார். ”குழந்தையை அழவிடாதேம்மா. அது சேவிக்கத் தேவை இல்லை. அதுவே தெய்வம்.”

”அப்படியானால் அதன் குரல் அவனுக்குக் கேட்கட்டும்.”

அந்த உக்கிரம், அந்த வெறி, அந்தக் காளித்தனம் அம்மாவிடம் எப்பவுமே உள் உறங்கிக் கொண்டிருந்தது என்று என் அபிப்பிராயம். சமயத்தில் வெளிப்படும்.

குப்புசாமி முதலியார் - வாழ்க்கையில் என் நோக்கை பாதித்த சிலரில் அவரும் ஒருவர். அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/313&oldid=1534438" இலிருந்து மீள்விக்கப்பட்டது