பக்கம்:பாற்கடல்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



18

மாங்கல்யப் பிச்சை எடுக்கும்படி அம்மாவுக்கு யாரோ சொன்னார்கள், ஆனால் அம்மா எடுத்ததாக விவரம் இல்லை.

ஆனால், மாங்கல்யப் பிச்சை யாரோ எடுத்ததாகத் தான் பார்த்தது பற்றி அம்மா என்னிடம் சொல்லியிருக்கிறாள். சொல்லும்போதே அம்மாவுக்கு அழுகை வந்து விட்டது. எனக்கு பூமி நடுங்கிற்று.

வயதான தம்பதிகளாம். கிழவர் நினைவிழந்து ரேழித் திண்ணையில் கிடக்கிறார். அவருடைய அகமுடையாள் - மாமியென்று சொல்வேனா, பாட்டி என்று சொல்வேனா? நரை மஞ்சள் பூத்துவிட்ட அந்தக் கூந்தல் முடிச்சில் மல்லிச்சரம் ஆட, பட்டுப்புடவை உடுத்து, இரு கைகளிலும் முந்தானைத் தலைப்பைப் பிடித்தபடி வீட்டு வாசல்படிகளினின்று சரசரவென்று இறங்கித் தெருவில் வேகமாக நடந்து செல்கிறாள்.

இரண்டொரு வாக்கியத்தின் அவசர வீச்சில், நிமிஷத்தில் காக்ஷியை உட்கண் முன் கொணர்ந்து நிறுத்தும் ஆற்றல் அம்முவாத்துக்கே வழிவந்த பாடு.

நெற்றியில் பதக்கம் போன்ற குங்குமப் பொட்டு. பாட்டியின் தந்தச் சிவப்பு - ஈதெல்லாம் அம்மா சொல்லவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/315&oldid=1534441" இலிருந்து மீள்விக்கப்பட்டது