பக்கம்:பாற்கடல்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

331


கொஞ்சமேனும் நிஜத்தின் ஆதாரம் இருந்தால்தான், நம்பக்கூடியதாகவும் படிப்பவன் அத்துடன் ஒன்றக் கூடியதாகவும் இருக்க முடியும்” ஆகாயத்திலிருந்து நார் கிழித்ததாக, 150% கற்பனை என்று தம்பட்டம் தட்டும் எழுத்தும் இதற்கு விலக்கல்ல.

“உண்மைச் சம்பவங்களை இலக்கிய அனுபவங்களாக மாற்றுகிறேன் என்று இவர் சொல்லிக்கொள்ளும் சாக்கில் இவருடைய சொந்த விவகாரங்களைப் பற்றி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?” ஆக்ஷேபணைக்காகவே ஆக்ஷேபணை செய்பவர்க்கு என் பதில் இதுதான்: கையில் உள்ளதை விட்டுவிட்டு, காற்றில் பறப்பதை வைத்துக்கொண்டு இலக்கியம் பண்ணச் சக்தி எனக்குக் கிடையாது.

“இது எனக்கு நேர்ந்தது, அல்லது நேரக்கூடியது. இதில் இவ்வளவு அழகு இருக்கிறது என்பதை, நேர்ந்த போது எப்படி அறியாமல் போனேன்?” என்கிற ஒரு புல்லரிப்பு, அதன் விளைவாக ஒரு இன்பம், உயிருக் குயிர் அனுதாபம், உள்ளூர ஊறும் ஆத்ம பலம், நம்பிக்கை - இதுதான் இலக்கிய அனுபவம். என் காலத்தில் எனக்கும் முன் காலத்தில், அதற்கும் முன் காலத்தில் இதுபோன்ற மனிதர்கள் நடமாடினார்கள்; வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக இருந்த அவர்களுடைய நம்பிக்கைகள், லக்ஷியங்கள், ஆசாபாசங்கள்; வாழ்க்கை முறை இன்னவிதமாக இருந்தன. இப்போது எந்த அளவுக்கு நீர்த்துப் போய்விட்டோம். அல்லது எந்தெந்தக் கோணங்களில் முனனேற்றம் கண்டிருக்கிறோம் - எனக்கு நேர்ந்த சம்பவங்கள் என் நோக்கை, எந்த அளவுக்கு பாதித்தன என்பதைச் சொல்லி, அதனால் நேரும், நேரக்கூடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/337&oldid=1534523" இலிருந்து மீள்விக்கப்பட்டது