பக்கம்:பாற்கடல்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

339


ஒருநாள் மாலை, எதிர்வீட்டில் அங்கே பையன்களுடன் விளையாடிவிட்டு, வீடு திரும்பியபோது, எல்லாரிடமும் ஒரு பரபரப்பான நடமாட்டம் கண்டேன். மன்னி ஒரு கம்பளியில் தலையணையை வைத்துப் படுக்கையாகச் சுருட்டிக்கொண்டிருந்தாள். அம்மா ஒரு சின்னப் பெட்டிக்குள் அண்ணாவின் துணிகள், மருந்துகள் என்னவோ அடுக்கிக் கொண்டிருந்தாள். அண்ணாவும் பரபரப்பாக அலைந்துகொண்டிருந்தார். என்னைக் கண்டதும் நேரே என்னிடம் வந்து என் தோள்களை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு, “மன்னியும் நானும் ஊருக்குப் போகிறோம். அப்பாவுக்கு உடம்பு சரிப்படலேன்னு சேதி வந்திருக்கு. போகும் போது எங்கே போறேன்னு கேட்காதே. கேட்கப்படாது. முன்கூட்டியே சொல்லிவிட்டேன்.“

ஆனால் இந்த வாய் சும்மா இருக்காது. எங்கே போறேன்னுதான் கேட்கக்கூடாது. எப்போ திரும்பி வருவேன்னு கேட்கக்கூடாது என்று சொல்ல வில்லையே! அண்ணாவும் மன்னியும் வாசற்படியில் இறங்கியாச்சு, கேட்டும்விட்டேன். கேட்காவிட்டால் எனக்கு மண்டை வெடிச்சுடும். அது ஏன் அப்படி?

“நான் மெனக்கெட்டுச் சொல்லி இருக்கேன்“ பல்லைக் கடித்துக்கொண்டு அண்ணா கையை ஓங்கிவிட்டார்.

“சரி. விடுடா சப்தரிஷி! எல்லாம் நடக்கறதுதான் நடக்கும். பெருந்திரு விட்ட வழி! குழந்தையைச் சிக்ஷை பண்ணிண்டிருந்தா நமக்கு ரெயிலுக்கு நேரமாயிடும்.“

அவசரமாக அவர்கள் போனபிறகு, அம்மாவிடம் சக்கையாக வாங்கினேன். ஆனால் அடியெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/345&oldid=1534616" இலிருந்து மீள்விக்கப்பட்டது