பக்கம்:பாற்கடல்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

341


உடனே எல்லாரும் அழத் தொடங்கிவிட்டனர். இது மாதிரி இதுவரை நாங்கள் குழந்தைகளுக்குப் பார்த்துப் பழக்கம் இல்லை. கை கால்கள் உதறல் எடுத்துக் கொண்டன. நாங்களும் ஒன்றும் புரியாமலே அழுதோம்.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பெரிய சித்தப்பா ஆபீஸிலிருந்து வந்தார். இத்தனை அழுகை நடுவில் அவர் ஒருவர்தாம் அழவில்லை. சிணுங்கக்கூடவில்லை. என் நினைப்பில், அவர் கண்ணீர் சிந்தியதாகவே எனக்கு ஞாபகம் இல்லை. உள்ளம் கெட்டி.

அன்றிரவே எல்லாரும் ரெயிலேறிவிட்டோம். ஆனால் ஜாலியா இல்லை. அம்மாவும் சித்தியும் முன்றானையால் வாயைப் பொத்தியபடி உட்கார்ந் திருந்தனர். குழந்தைகள், எங்கள் சத்தம் அதிகரித்தால் அவ்வப்போது 'ஷ' பண்ணிக் கொண்டிருந்தனர். வழியில் எங்களுக்கு எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை. கையோடு எடுத்தும் வரவில்லை. கார்த்திகேயன் ஜன்னலோரம் உட்கார்ந்துகொண்டு, ஒரு கையில் தலையைத் தாங்கியபடி மெளனமாகக் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தான். சித்தப்பா உறவின் மரியாதையைக் கடைப்பிடிக்க பரஸ்பரம் அவனுக்கு வயது வரவில்லை. எங்களிடமும் மரியாதை இல்லை. ஊரைவிட்டு ஊருக்கு ரெயிலில் போகிறோம் - அந்த ஜாலியோட சரி. ஆனால் அதுவே எங்களுக்கு அந்த வயதில் போதும். இரக்கம், அனுதாபம், சமயம் சந்தர்ப்பம் அறியா வயது. பெரியவர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்? பசி வயிற்றைக் கிள்ளுகிறது. எங்கள் முனகல், அழுகை எதுவும் பலிக்கவில்லை.

லால்குடி ஸ்டேஷனில் இறங்கியதும் ஜட்கா பிடித்து, வண்டி கீழத் தெருமுனை திரும்புமுன்னரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/347&oldid=1534618" இலிருந்து மீள்விக்கப்பட்டது