பக்கம்:பாற்கடல்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352

லா. ச. ராமாமிருதம்


கிடையாது. திரைகள் விழுகின்றன. பின்னாலிருந்து உருவம் வெளிப்படுகிறது. இருளில் மறைந்திருந்தவை வெளிச்சமாகின்றன. தேடல் தத்துவம் இதுதான். அதனால் சும்மாவே இருக்க முடியாது. இருப்பின் அதுவே சாவு.

எங்கேயோ போய்விட்டேன்; நிற்க இதோ, அத்தை பேசுகிறாள்:

“ஆகவே சப்தரிஷியும் மன்னியும் உள்ளே நுழைஞ்சதுமே ராமண்ணாவுக்கு அதிர்ச்சி ஆகியிருக்கும். எனக்கும் உங்களை முன்கூட்டி உஷார்ப்படுத்த முடியவில்லை. நான் என்ன செய்வேன்? மன்னிதான், பாவம் வாங்கிக் கட்டிக் கொண்டாள். என்ன ஆனால் என்ன? சமயத்துக்கு வந்துட்டேன். அவனும் அப்புறம் சரி ஆயிட்டான். சப்தரிஷியின் முதுகைத் தடவிக் கொடுத்தான். இவ்வளவு கனிவாக அப்பாவையும் பிள்ளையையும் இதுவரை நான் பார்த்ததில்லை. எனக்கு ஒன்று தோன்றியது. உண்மை அதன் உண்மையில் வெளிப்பட அதற்கு ஒரு சமயந்தான் உண்டு. அதோடு அதன் முத்து நீர்த்துப் போச்சு. மிச்சமெல்லாம் நீர்த்துப் போன ஜலத்தில் நம் முகத்தைப் பார்த்துக்கற சமாச்சாரந்தான்.“

புரியாத பாஷை பரம்பரை ரத்தம். வாளாடி அத்தையும் லேசுப்பட்டவள் அல்ல; அவளும் பாட்டுப் புனைவாள். சில மாதங்களுக்கு முன் லால்குடி சென்றபோது அவளுடைய பேரன் பாடிக் கேட்டேன்.

எல்லாம் சகஜமாத்தான் இருந்தது. சப்தரிஷி என்னைக் கண்ணில் கேள்விக்குறியுடன் பார்த்தது எனக்குத் தெரியாதா? அணையற சுடரப்பா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/358&oldid=1534631" இலிருந்து மீள்விக்கப்பட்டது