பக்கம்:பாற்கடல்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354

லா. ச. ராமாமிருதம்


ஆனால் இன்று இப்போது இன்னும் பால்காரன் வரவில்லை.

‘ஈ ஜகமுலோ திக்கெவரம்மா!’ என்கிற அடியைப் பாடிக்கொண்டே அழுதபடி எனக்கு விழிப்பு வந்தது - வந்துகொண்டே இருந்தது தெரிந்தது. என் கன்னங்கள் நனைந்திருந்தன.

ஒரு நிமிஷம், இதற்கு முந்தியோ பிந்தியோ என் கனவில் வருவதற்குக் காரணமாகச் சொல்லிக்கொள்ள அந்தப் பாட்டை நான் நினைத்ததில்லை. அதுபற்றி வீட்டில் பேச்சும் இல்லை. முதலில் இதுபோன்ற கீர்த்தனைகள் பற்றிப் பேசக்கூடியவர்கள், பேசியவர்கள் மூலம் போய்ச் சேர்ந்தாச்சு. ரேடியோவிலும் அந்தப் பாட்டு சமீபத்தில் கேட்கவில்லை.

ஆனால் எனக்கு ரீதிகௌளை ரொம்பவும் பிடித்த ராகம். அதிலும் ‘ஜனனி நினுவினா’ கேட்டுக்கொண்டே இருக்கையில் பட்டென்று உயிர் போய்விடாதா என்று நான் வெகுவாக விரும்புவது உண்டு. எந்தவிதமான உன்னத அனுபவத்திற்கும் சாவைப் பற்றிய எண்ணம் சொர்க்கவாசலாக எனக்குத் தோன்றுகிறது.

”ஜனனி நினுவினா”—

வேண பேர் பாடுகிறார்கள். ஆனால் ஆலத்தூர் சகோதரர்களிடம் கேட்கையில் அதில் சக்கைப்பிரதமனின் வழவழா கொழகொழா இல்லாது, விளம்ப காலம் என்கிற சாக்கில் ஆமை மெதுவும் இலாது அதற்குரிய நடையில் சாஹித்யத் துல்லியமும் ராகத்தின் முழு ஸ்வரூபமும் பரிணமிப்பதாக பரிமளிப்பதாக எனனுடைய எணணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/360&oldid=1534635" இலிருந்து மீள்விக்கப்பட்டது