பக்கம்:பாற்கடல்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

363


மின்சாரம் தோற்ற இருளில் குத்துவிளக்குகளின் வெளிச்சத்துக்கு நடுவே படத்தினின்று அதோ ராஜராஜேஸ்வரி புன்னகை ஜவலிக்கிறது.

நீங்கள் பல வருடங்களுக்கு முன் சொல்லைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். ”நெருப்பு என்றால் வாய் வெந்து விட வேண்டும்!” இந்தக் கதையில் அதுபோலச் சொல்லுக்கும் செயலுக்கும் இடைக்கோடு அவிழ்ந்திருக்கிறது.

ஆச்சு, கதையம்சத்தைக் காட்டிக் கொடுக்காமல் இந்தக் கதையின் கதையைச் சொல்லிவிட்டேன். கொஞ்சம் அதிகமாகவே சொல்லிவிட்டேன். இனி வாசகன் பாடு.

கடைசியாக ஒரு வேண்டுகோள். என்னுடைய வேளை வரும்பொழுது இந்தப் பாட்டு என் செவியில் ஒலித்துக்கொண்டே அனாயஸ் மரணத்தில் என் உயிர் பிரிய வேண்டும் என்று என் சார்பில் அவளை வேண்டிக்கொள்ளுங்கள். உண்மையாகத்தான். நான் கேட்கும் வரமும் சாமானியமா? ஆனானப்பட்ட மகான்களே கிடந்துதான் சடலம் கழற்றும்படி இருந் திருக்கையில் என் ஆசையை அவள் அகந்தையாகவே கருதக்கூடும். ஆனால் அதைக் கொடுத்தவளும் அவளே. ஈ ஜகமுலோ நினுவினா திக்கெவரம்மா!

அண்ணாவுக்கு உடல் சரியாகவே தேறவில்லை. என்னதான் வைத்தியம் செய்துகொண்டாலும், பட்டணத்துப் புழுதியினின்று அவர் தப்பினாலே ஒழிய அவருக்கு விமோசனம் இல்லை. டாக்டர் தீர்ப்பு அளித்துவிட்டார். ஆகவே குடும்பம் ஒரு முக்கியமான தீர்மானம் எடுக்க வேண்டியதாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/369&oldid=1534645" இலிருந்து மீள்விக்கப்பட்டது