பக்கம்:பாற்கடல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

69


அதுபற்றி இன்னும் நினைக்கக்கூட ஆரம்பிக்கவில்லை. களவு, தனிக்கலையாக, அதன் அந்தஸ்துக்கு வரவில்லை.

ஒருநாள், ஐயா காவல் முடித்து, காலை வீடு திரும்ப வில்லை. ஆனால் அதுபற்றிக் கவலைப்படுவதற்கில்லை.

பல் குச்சியை வாயில் மாட்டிக்கொண்டு எங்கானும் போயிருப்பார்.

எவனேனும் கடலைக்காய் கொல்லைக்காரன், வேர்க்கடலை தருவதாகச் சொல்லியிருக்கலாம்.

அல்லது வாழைத்தோட்டக்காரன் தார் தருவதாகச் சொல்லியிருப்பான்.

கரும்பு ஆலையில் சக்கரம் சுற்றினால் வெல்லக் கட்டி கிடைக்கும். ஐயாவுக்கு வெல்லம் என்றால் உயிர்.

ஆனால் இந்த வீட்டில் எவ்வளவு வந்தால் என்ன? ஆடு அப்போ, மாடு மத்தியானம்.

எச்சுமிப் பாட்டிக்கு மட்டும் இருப்புக் கொள்ளவில்லை. 'ஐயா ஏன் வரவில்லை ? எனக்கென்னவோ பண்றதே!' என்று அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு கூடத்துக்கும் தெருவுக்குமாக அலைந்தாள்.

வாசல் திண்ணையில் தாத்தா, வழக்கம்போல் பாட்டு நோட்டில் மூழ்கியிருந்தார்.

”ஐயா வராண்டா!”

ஐயா தனியாக வரவில்லை. குடிகாரன்மாதிரி அவர் தள்ளாடி இரண்டுபேர் பிடித்துக்கொண்டு வந்து கூடத்தில் விட்டதும், தடாரென்று தரையில் சாய்ந்தார். தொட்டுப் பார்த்தால் ஜுரம் மழுவாய்க் காய்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/75&oldid=1533309" இலிருந்து மீள்விக்கப்பட்டது