பக்கம்:பாற்கடல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

லா. ச. ராமாமிருதம்


ஒன்பது பணம் - ஆனால் ஓயச்சொல்ல யாருக்கேனும் தைரியமுண்டா? நாணு அவருடைய கொத்தவரைக் காய்ப் பின்னல் பிராயத்தில், காஞ்சீபுரம் நயினாப் பிள்ளையிடம் மூணுமாதம் குருகுல வாசம். அதற்குள் பாடம் வராது என்று அனுப்பிவிட்டாரா, அல்லது ஆகாத விஷமம் செய்தான் என்று அடித்துத் துரத்தி விட்டாரா? நாணுவுக்கே மறந்துவிடும் நாளாகிவிட்டது. ஆனால் தான் நயினாப்பிள்ளை சிஷ்யன் என்று முத்திரை குத்திக்கொள்வதற்கு மூணு மாதம் போதாதா! நாணு யாருக்கேனும் தம்பூரா மீட்டக்கூட மேடையேறினதாக எனக்கு நினைவில்லை. அவருடைய வித்தை, வித்வத், அனுபவம் எல்லாம் பந்தியில் ஸ்லோகம் பாடுவதோடு சரி.

பந்தியில் ஸ்லோகம் பாடுவது, விடிவேளையில் வாசலில் சாணம் கரைத்துத் தெளிப்பது, சாப்பிட்ட இடத்தைச் சாணமிட்டு எச்சில் மெழுகுவது - வீட்டில் டேபிள் மீல்ஸ் வந்தபிறகு - இரவு படுத்துத் தூங்கிய இடத்தை மறுநாள் ஈரத்துணியால் துடைப்பது இதெல்லாம் என் பிள்ளைக்கு அடுத்த தலைமுறைக்கு நம் கலாச்சாரம் என்பது அறவே மறந்து, தகவல்ரீதியில் ஒரு சங்கதி. சிரிப்புக்குரிய சங்கதி (The Savages) யானால் ஆச்சரியமில்லை.

சரி, இது, இங்கே, இப்போ எதற்கு? விஷயத்துக்கு வருகிறேன்.

சென்ற பக்கங்களில் என் குடும்பத்தைப் பற்றியே இருப்பதால், சுய தம்பட்டத்தின் இரைச்சல் படிப்பவர்க்குச் சற்று அடங்க வேண்டாமா ? வீட்டுக்குள்ளேயே எத்தனை நாழிகை அடைந்திருப்பது! ஏற்கெனவே நான் என் எழுத்தில் குடும்பத்தை விட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/80&oldid=1533314" இலிருந்து மீள்விக்கப்பட்டது