பக்கம்:பாற்கடல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

89


பத்து மாதம் சூளை வைத்த குழியாச்சே! அதிலிருந்து ஜ்வாலையின் ‘குபீர்!’ But Life Marches On.

எது தன்னிரக்கம் ? எது உண்மையாக, மன்னுயிருக்குப் பரிதவிப்பு?

எது கண்துடைப்பு? எது கண்ணீரைத் துடைப்பது?

Legend. Fable. Parable. என் பெரிய பாட்டனார் ஐயாவைச் சந்தேகமில்லாமல் இந்த ரகத்தில் சேர்த்து விடலாம். இதுமாதிரி ஒரு மனிதன் இருக்க முடியுமா என்று அவரிடம் ஒரு நம்பமுடியாத தன்மையிருந்தது. அத்தனை வயதிலும், ஆச்சரியத்துக்குரிய ஒரு குழந்தைத்தனம், தனக்கென்று ஏதுமில்லை. தனக்கென்று ஏதும் தேடவில்லை. வைத்துக்கொள்ளவில்லை. நாளைய கவலையுமில்லை. நேற்றையின் பச்சாதாபமும் இல்லை. இருந்தவரை அன்று அன்றைக்கே என, அவர் உடல் மனவறைகளுக்கு எட்டியவரை, ஒவ்வொரு நாளையும் பூராக வாழ்ந்தவர். அது அவருக்கு இயல்பாக அமைந்துவிட்டது. ஆனால் அதையே வாழ்க்கையை வாழ ஒரு மாபெரும் உத்தி என்று நினைக்கையில் அதில் ஏதோ கவர்ச்சி legend இன் லக்ஷணங்கள் தோன்றுகின்றன. எழுத்தில் மட்டும், கலைகளில் மட்டும்தானா உத்தி? வாழ்க்கையை வாழ்வது, வாழ்ந்து காட்டுவது - இதைவிடப் பெரிய உத்தி இருக்கிறதா என்ன?

இந்த அத்தியாயத்துக்கு, நனவோடை உத்தியில்,

‘எழுத்தாளனின் இலக்கிய வாழ்வில் ஒருநாள்' என்று தலைப்பு இடலாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/95&oldid=1533368" இலிருந்து மீள்விக்கப்பட்டது