பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - இல்லறவியல் - ஒழுக்கமுடைமை

109


133. ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க

    மிழிந்த பிறப்பாய் விடும்.

(இ-ரை.) ஒழுக்கமுடைமை குடிமை - நல்லொழுக்க முடைமையே உயர்குலத் தன்மையாம்; இழுக்கம் இழிந்த பிறப்பு ஆய்விடும் - தீயொழுக்கம் தாழ்ந்த குலமாகிவிடும்.

குடி என்னும் சொல் தலைக்கட்டு, குடும்பம், சரவடி (கோத்திரம்), குலம், குடிகள் (நாட்டினம்) என்னும் ஐவகை மக்கட் கூட்டத்தையுங் குறிக்கும். இங்குக் குடியென்றது குலத்தை. குலமாவது ஒரே தொழில் செய்யும் மக்கள் வகுப்பு. வரணம் என்பது ஆரியர் வந்தபின் நிறம்பற்றியும் பிறப்புப்பற்றியும் ஏற்படுத்தப்பட்ட ஆரிய வகுப்புப் பிரிவினையாதலால், அது "யாதும் ஊரே யாவருங் கேளிர்", "குலமும் ஒன்றே குடியும் ஒன்றே". "பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்" என்னும் தமிழ்க் கொள்கைக்கும், அதைத் தழுவிய வள்ளுவர் கருத்திற்கும் ஏற்காது. ஆகவே, தமிழ் வொழுக்கங் கெடின் பிராமணனுந் தாழ்ந்தவனாவான் என்பதே வள்ளுவர் கருத்தாம்.

134.மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்

   பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

(இ-ரை.) பார்ப்பான் ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் - ஆரியப் பார்ப்பானான பிராமணன் தான் கற்ற வேதத்தை மறந்தானாயினும் அதைத் திரும்ப ஓதிக்கொள்ள முடியும்; பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் - ஆனால் அவன் தன்னை உயர்ந்தவனாகச் சொல்லிக் கொள்ளும் பிறப்பு, தமிழ் ஒழுக்கங் குன்றின் கெடும்.

ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டுப் பண்பாட்டின்படியே ஒழுக்க வரம்பிருக்கும். பிராமணன் வேதத்தை மறந்தானா மறக்கவில்லையா என்பது தமிழ்நாட்டில் ஆய்விற்குரியதன்று; அவன் தமிழ் வொழுக்கத்தைக் கடைப்பிடித்தானா இல்லையா என்பதே அதன் ஆய்விற்குரியதாம். ஆகவே, அவ் வொழுக்கத்தினாலேயே அவன் உயர்குலத்தானாவான் என்பதும், அது கெட்டவிடத்துத் தாழ்ந்த குலத்தானாகிவிடுவான் என்பதும், தமிழற நூல் முடிபாம்.

135. அழுக்கா றுடையான்க ணாக்கம்போன் றில்லை

    யொழுக்க மிலான்க ணுயர்வு.