பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

49



455. மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு மினந்தூய்மை தூவா வரும்.

(இ-ரை.) மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - ஒருவனை நல்லவனென்று சொல்லுதற் கேதுவான உளத்தூய்மையும் செயல் தூய்மையும் ஆகிய இரண்டும்; இனம் தூய்மை தூவா வரும் - இனத்தூய்மையைப் பற்றுக்கோடாகக் கொண்டு தோன்றும்.

மனத்தூய்மையாவது தனக்குத் தீதென்று தோன்றுவதைப் பிறர்க்குச் செய்யாமைக்கும், நன்றென்று கண்டதை அவர்க்குச் செய்தற்கும், ஏதுவான அறப்பான்மை, அல்லது அன்புநிலை. மனத்தூய்மையால் வினைத்தூய்மையுந் தானாக அமையுமேனும், பட்டறிவில்லாதவர்க்கு வினைசெய்யும் முறை தெரியாமையின், அவரை அதிற் பயிற்றுவதற்கும் இனத்தூய்மை வேண்டியதாயிற்று, இருதலைப்பட்ட மனத்தையும் வினையையுங் குறிக்கவே இடைப்பட்ட சொல்லும் அடங்கிற்று. இனி, மனத்தைப் பொறியாகக் கொண்டு, வினை என்பது முக்கரண வினை என்று கூறினும் பொருந்தும். 'செய்வினை' என்பது செய்யும் வினையெல்லாம் என்று பொருள்பட நின்றது. ஆறாம் வேற்றுமைத் தொகையாக வந்து வலிமிக்குப் புணர வேண்டிய தொடர்கள், இன்னோசைபற்றி எழுவாய்த் தொடராக மாறி மெலிமிக்கும் இயல்பாகப் புணர்ந்தும் நின்றன.

456. மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க் கில்லைநன் றாகா வினை.

(இ-ரை.) மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் - தூய மனத்தார்க்கு நன்மக்கட் பேறு உண்டாகும்; இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - தூய இனத்தையுடையார்க்கு எல்லா வினையும் கைகூடும்.

பெற்றோரைப்போற் பிள்ளைகளிருப்பதே பெரும்பான்மையாதலால். ‘எச்ச நன்றாகும்' என்றும், நல்லினத்தோ டெண்ணிச் செய்யும் வினை நன்றாய் முடியுமாதலால் 'இல்லை நன்றாகா வினை' என்றும் கூறினார்.

இங்கு 'எச்சம்' என்பதற்குப் புகழ் என்றும் உரைகொள்வர், அடுத்த குறள் "இனநலம் எல்லாப் புகழுந் தரும்" என்று கூறுவதால், அவ் வுரை பொருந்துவதன்றாம்.