பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்ல மருகியும்‌, நல்ல மாமியும்‌

125

செய்து கொண்டார்கள். அந்தப் பிரகாரம் நாங்கள் முந்திய ஆறு மாதம் சம்பந்தி முதலியார் வீட்டிலும், பிந்தின ஆறு மாதம் என் தகப்பனார் வீட்டிலுமிருந்து வந்தோம். என் தாயாரும் ஞானாம்பாளும் தாயும் மகளும்போல அதிக நேசமும் பிரியமுமாக ஒத்து வாழ்ந்தார்கள். ஞானாம்பாள் வருகிறதற்கு முன் என் தாயார் தங்களுடைய தேக சௌக்கியத்துக்கடுத்த காரியங்களைக் கவனிப்பதற்குக்கூட நேரமில்லாமல் குடும்ப யோகக்ஷேம காரியங்களை ஏகதேசத்திற் பார்த்துப் பரிசிரமப்பட்டார்கள். ஞானாம்பாள் வந்ததுமுதல் அவளுங் கிருக கிருத்தியங்களை வகித்துப் பார்த்து வந்ததுந் தவிர, என் தாயாருடைய தேக போஷணைக்கடுத்த காரியங்களையும் அவளுடைய கையாலேயே செய்துவந்தபடியால் என் தாயாருக்குப் பெரிய ஆறுதலும் சிரம பரிகாரமுமாயிருந்தது. அன்றியும் எனக்கு வேலை செய்யப் பல வேலைக்காரர்களிருந்தாலும் கலியாணத்துக்குப் பிற்பாடு என்னுடைய வேலையையும் ஞானாம்பாளே செய்து வருவாள். நான் ஒருநாள் அவளைப் பார்த்து “நாமென்ன ஏழைகளா? நமக்கு வேலை செய்ய ஊழியக்காரர்கள் இல்லையா? நீ உன் கையாலே வேலை செய்வது எனக்குத் திருப்தியில்லை” யென அவள் சொல்லுகிறாள்:— ““எளிய ஸ்திரீகள் கைப்பாடுபட்டு ஜீவனத்துக்கு வேண்டிய காரியங்களையும் சம்பாதித்துக் கொண்டு சமையல் முதலிய வீட்டு வேலைகளையும் செய்து வருகிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட வேலைகள் யாதொன்றுமில்லை. உங்களுக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளையாவது நான் செய்யக் கூடாதா?“” என்றாள். ““இதற்கு முன் ஒரு நாளும் நீ வேலை செய்வதை நான் பார்த்ததில்லையே. இப்போது இவ்வேலைகளையெல்லாம் எப்படிக் கற்றுக் கொண்டாய்?”“ என்று நான் கேட்க அவள் ““பக்ஷிகளுக்குப் பறக்கவும் மீன்களுக்கு நீந்தவும் யார் கற்பித்தார்கள்? அப்படியே நானும் வேலை செய்யப் பயின்றேன்”” என்றாள்.